குண்டாசாங், மே 23: ஜூன் 1 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள நிலச் சரக்கு போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கு மானிய விலை டீசல் கட்டுப் பாட்டுத் திட்டத்தின் (SKDS) கீழ் டீசல் மானியத்தை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
மே 20 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்."இதற்கு முன்பு, இந்த வாகனங்களுக்கான தகுதி கேமரன் மலைப் பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
தற்போது, நாடு முழுவதும் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களைக் கொண்டுள்ள நிலச் சரக்கு போக்குவரத்துத் துறை நிறுவனங்கள் ஜூன் 1 முதல் SKDS திட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தொடங்கலாம்," என்று அவர் இன்று இங்கு கூறினார்.
இதற்கு முன்பு தனிநபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் SKDS மூலம் டீசல் மானியத்தின் நன்மைகளை விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், வாகனப் பதிவை நிறுவனத்தின் பெயருக்கு மாற்றுவதற்கு உட்பட்டு இது வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.
"நிலச் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள், தங்கள் நிறுவனங்கள் அல்லது வணிகங்களை மலேசிய நிறுவனங்கள் ஆணையம் (SSM), மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM) அல்லது சபா மற்றும் சரவாக்கில் உள்ள மாநில சட்ட விதிகளுக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
"மேலும், விண்ணப்பதாரர்கள் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மூலம் வாகன உரிமையை தனிநபர் பிரிவில் இருந்து நிறுவனத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட பிற தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். மானியக் கசிவுகள் மற்றும் 'ஃப்ளீட் கார்டு' (fleet card) முறை கேடுகளைத் தடுப்பதற்கான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க வழிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, நிலச் சரக்கு போக்குவரத்துத் துறைக்கான SKDS நிலையான ஒதுக்கீடு வரம்பை சரிசெய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அர்மிசான் கூறினார்.
"நிலச் சரக்கு போக்குவரத்து துறையில் உள்ள 23 வகையான வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீடு வரம்பைப் பொறுத்து, ஒவ்வொரு ஃப்ளீட் கார்டுக்கும் மாதம் 900 லிட்டர் முதல் 5,000 லிட்டர் வரை நிலையான ஒதுக்கீடு வழங்கப்படும்."SKDS அமல்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளில் போக்குவரத்து வகைகளின் பயன்பாட்டு பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஃப்ளீட் கார்டுக்கான நிலையான ஒதுக்கீடு விகித சரிசெய்தல் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்."நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட கூடுதல் பயன்பாடு தேவைப்படும் நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் (KPDN) தலைமையிலான பெட்ரோலிய மானிய ஒப்புதல் குழுவிடம் கூடுதல் ஒதுக்கீட்டிற்கான மேல் முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்," என்று அவர் கூறினார்.
mysubsidi@kpdn.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது அருகிலுள்ள KPDN கவுண்டர்களில் நேரடியாகவோ மேல்முறையீட்டு விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.
"பதிவு ஒப்புதல் வழங்க பட்டதிலிருந்து SKDS அமைப்பில் உள்ள தற்போதைய மாதாந்திர பயன்பாட்டுப் பதிவுகள் மற்றும் உண்மையான செயல்பாட்டுத் தேவைகளுக்கான நியாயங்கள் அடிப்படையில் மேல்முறையீட்டு பரிசீலனை செய்யப்படும்.
"இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களைப் பெறாத பொது நிலப் போக்குவரத்து, நிலச் சரக்கு போக்குவரத்து மற்றும் பொது நீர்ப் போக்குவரத்துத் துறையில் உள்ள நிறுவனங்கள் மானிய விலை பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKPS) மற்றும் SKDS ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யுமாறு அமைச்சகம் ஊக்குவிக்கிறது," என்றார் அவர்.
SKPS மற்றும் SKDS மூலம் எரிபொருள் மானியம் பெறும் அனைத்து நிறுவனங்களும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஃப்ளீட் கார்டுகளின் பொறுப்பான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று அர்மிசான் வலியுறுத்தினார்.
"எந்தவொரு முறைகேடும் கண்டறியப்பட்டால் ஃப்ளீட் கார்டு உடனடியாக ரத்து செய்யப் படுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்," என்று அவர் எச்சரித்தார்.
மே 20 நிலவரப்படி, தகுதிபெற்ற பொது நிலப் போக்குவரத்து, நிலச் சரக்கு போக்குவரத்து மற்றும் பொது நீர்ப் போக்குவரத்து ஆகிய துறைகளைச் சேர்ந்த 179,716 நிறுவனங்களை உள்ளடக்கிய 432,495 வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களால் பயனடைந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"இதில் SKPS திட்டத்தின் கீழ் 19,189 நிறுவன 38,817 வாகனங்களும், SKDS திட்டத்தின் கீழ் 160,527 நிறுவன 393,678 வாகனங்களும் அடங்கும்," என்று அவர் கூறினார்.-- : https://www.mediaselangor.com/ms/2026/05/367176




