மலேசியா மாஸ்டர்ஸ் 2026 பூப்பந்து போட்டியில், நாட்டின் மூன்று முன்னணி ஆடவர் இரட்டையர் இணைகள் காலிறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாகத் தகுதி பெற்றுள்ளன
போட்டியின் முதல் நிலை வீரர்கள், நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களுமான ஆரோன் சியா - சோ வூ யிக் இணை, பிரான்சின் ஜூலியன் மாயோ - வில்லியம் வில்லேஜர் இணையை வெறும் 30 நிமிடங்களில் 21-12, 21-10 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
புக்கிட் ஜாலில், யூனிஃபை அரங்கில் நடைபெற்ற இந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
காலிறுதியில், அவர்கள் சீனாவின் ஹு கே யுவான் - லின் சியாங் யீ இணையை எதிர்கொள்ள விருக்கின்றனர். "முதல் சுற்றை விட இந்த ஆட்டத்தில் நாங்கள் பந்தின் ஓட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக பழகிக் கொண்டோம்.
மேலும், இன்று நாங்கள் குறைவான தவறுகளையே செய்தோம்," என்று வூ யிக் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், மூன்றாவது நிலை தொழில்முறை இணையான கோ ஸ்ஸே ஃபெய் - நூர் இசுடின் ரும்சானி, சக நாட்டவரான சியா வெய்ஜீ - தியோ ஈ யீ இணையை 21-14, 21-12 என்ற நேர் செட்களில் 29 நிமிடங்களில் தோற்கடித்தனர்.
வெற்றி எளிதாகக் கிடைத்த போதிலும், ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய இடங்கள் இருப்பதாக ஸ்ஸே ஃபெய் குறிப்பிட்டார்.
ஐந்தாம் நிலை வீரர்களான வான் ஆரிஃப் வான் ஜுனைடி - யாப் ராய் கிங் இணை, மற்றொரு மலேசிய இணையான காங் காய் சிங் - ஆரோன் டாய் இணையை 21-12, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதி இடத்தை உறுதி செய்தது.
காலிறுதியில் அவர்கள் அமெரிக்காவின் சென் ஸி யீ - பிரெஸ்லி ஸ்மித் இணையைச் சந்திக்கவுள்ளனர்.
மே 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மலேசியா மாஸ்டர்ஸ் 2026 போட்டியில், மொத்தம் 500,000 அமெரிக்க டாலர் (சுமார் 1.98 மில்லியன் ரிங்கிட்) பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.


