சிலாங்கூர் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 151 பேருக்கு மாநில விருதுகள் வழங்கி கௌரவிப்பு

22 மே 2026, 5:55 AM
சிலாங்கூர் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 151 பேருக்கு மாநில விருதுகள் வழங்கி கௌரவிப்பு

ஷா ஆலம், மே 22: சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிலாங்கூர் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 151 பேருக்கு 'பிங்காட் நெகிரி சிலாங்கூர் டாருல் எஹ்சான்' (Pingat Negeri Selangor Darul Ehsan) விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டன.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் கட்டடத்தின் வெள்ளி விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், கோலா லங்காட், கோலா சிலாங்கூர், சபாக் பெர்ணம் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

சிலாங்கூர் சுல்தானின் பிரதிநிதியாக, சிலாங்கூர் ராஜா மூடா, மேன்மைதங்கிய துங்கு அமீர் ஷா இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில், ஒருவருக்கு 'பிங்காட் கெசெமர்லாங்கான் சுக்கான் சிலாங்கூர்' (P.K.S - சிலாங்கூர் விளையாட்டு சிறப்பு விருது) வழங்கப் பட்டது. சிலாங்கூரில் பிறந்த அல்லது இங்கு வசிக்கும், குறைந்தது மூன்று ஆண்டுகள் மாநிலத்தைப் பிரதிநிதித்து விளையாடி, மாநில அல்லது தேசிய அளவில் (பாராலிம்பிக் விளையாட்டுகள் உட்பட) பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் அல்லது அதிகாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

மேலும், மாநிலத்திற்குச் சிறந்த சேவையாற்றிய மற்றும் நற்பண்புகளுடன் விளங்கிய 21 பேருக்கு 'பிங்காட் பெக்கெர்த்தி தெர்பிலே' (P.P.T) விருது வழங்கப்பட்டது.

'பிங்காட் ஜாசா கெபக்தியான்' விருதுக்கு இணையான 'பிங்காட் பெர்கிட்மாத்தான் செமர்லாங்' (P.P.C) விருது 26 பேருக்கு வழங்கப்பட்டது. மாநில அரசாங்கத்தில் குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய ஆதரவுக் குழு (kumpulan sokongan) அரசாங்க அதிகாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

தங்களின் கடமைகளைச் செய்வதில் காட்டிய அர்ப்பணிப்பு, விசுவாசம், விடாமுயற்சி ஆகியவற்றுக்காகவும், சிறப்பான திறன்கள் மற்றும் நற்பண்புகளுக்காகவும் 87 பேருக்கு 'பிங்காட் ஜாசா கெபக்தியான்' (P.J.K) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மாநில அரசாங்கத்தில் குறைந்தது 20 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, சிறந்த நன்னடத்தை மற்றும் நற்சேவைப் பதிவைக் கொண்ட 16 அரசாங்க ஊழியர்களுக்கு 'பிங்காட் பெர்கிட்மாத்தான் சிலாங்கூர்' (P.P.S) விருது வழங்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.