அரச நிறுவனத்தை அவமதிக்கும் பதிவுகள்: டிக் டாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க எம்.சி.எம்.சி. உத்தரவு

22 மே 2026, 5:26 AM
அரச நிறுவனத்தை அவமதிக்கும் பதிவுகள்: டிக் டாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க எம்.சி.எம்.சி. உத்தரவு

ஷா ஆலம், மே 22: மலேசிய அரச நிறுவனத்தை அவமதிக்கும் பதிவுகள் தொடர்பில் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை தொடர்ந்து, உடனடியாக திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு, பதிவுகளைக் கண்காணிக்கும் மற்றும் கையாளும் வழிமுறைகளை வலுப்படுத்து மாறும் டிக்டாக் (TikTok) நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தொடர்பான கணக்கு என்று கூறி, மிகவும் முகம் சுளிக்க வைக்கும், பொய்யான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பரவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"குறிப்பாக மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் நிறுவனங்களை உள்ளடக்கிய, முகம் சுளிக்க வைக்கும், பொய்யான, அச்சுறுத்தும் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் பதிவுகளைப் பரப்புவதற்கு இணையத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை எம்.சி.எம்.சி. மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

"இந்த விவகாரம் 3ஆர் (இனம், மதம் மற்றும் அரச நிறுவனம்) என்ற மிகவும் உணர்திறன் வாய்ந்த சூழலின் கீழ் வருகிறது. இது பொது அமைதி, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் மீதான மரியாதையைப் பாதிக்கக் கூடியதாகும்," என்று எம்.சி.எம்.சி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்ட படங்களும் அந்தப் பதிவுகளில் அடங்கும் என்றும், இது 1998ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 மற்றும் நாட்டின் பிற குற்றவியல் சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக டிக்டாக் நிறுவனத்துடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், சம்பந்தப்பட்ட பதிவுகளை உடனடியாக அகற்றுவதில் அவை தொடர்ந்து பரவாமல் தடுப்பதிலும் அந்தத் தளத்தின் செயல்பாடுகள் இன்னும் திருப்திகரமாக இல்லை என்று எம்.சி.எம்.சி. கூறியது.

"இந்தச் சட்டப்பூர்வ கோரிக்கையின் வாயிலாக, டிக் டாக் நிறுவனம் உடனடியாகத் திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன், பதிவுகளைக் கண்காணிக்கும் மற்றும் கையாளும் வழிமுறைகளையும் வலுப்படுத்த வேண்டும்.

"மலேசியச் சட்டங்கள் மற்றும் தளத்தின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் பதிவுகளுக்கு எதிராக டிக்டாக் மிகவும் ஆக்கப்பூர்வமான அமலாக்க நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீங்கு விளைவிக்கும் பதிவுகளைக் கையாள்வதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்குத் தங்கள் தளம் தவறாகப் பயன்படுத்தப் படாமல் இருப்பதை உறுதி செய்வது குறித்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்குமாறும் டிக்டாக் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"இணையத் தளங்கள் தவறாகப் பயன் படுத்தப் படுவதைத் தடுக்க, தமது அதிகார வரம்பிற்குட்பட்டுத் தேவையான மற்றும் முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எம்.சி.எம்.சி. தொடர்ந்து எடுக்கும். தகுந்த சட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

"சட்டவிரோதமான, பொது அமைதிக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தும் பதிவுகளைக் கையாள்வதில் சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள் பொறுப்புடனும் விரைவாகவும் செயல்பட வேண்டும்" என்று எம்.சி.எம்.சி. திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.