கோலாலம்பூர், 22 மே – தைராய்டு சுரப்பி என்பது மனித கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ உறுப்பு ஆகும். இது வளர்சிதை மாற்றம், ஆற்றல் மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த உறுப்பு புற்றுநோயால் தாக்கப் படும் போது, அதன் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் வரை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
மலேசிய தேசிய புற்றுநோய் பதிவு அறிக்கை 2017-2021-இன் படி, தைராய்டு புற்றுநோய் பெண்கள் மத்தியில் எட்டாவது மிகவும் பொதுவான புற்று நோயாக உள்ளது; 100,000 மக்கள் தொகையில் 4.2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைராய்டு புற்றுநோய் பெரும்பாலும் 'அமைதியான அச்சுறுத்தல்' என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது தெளிவான அறிகுறிகள் இல்லாமல் ஏற்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கழுத்தில் கட்டி மற்றும் குரல் மாற்றம் போன்ற ஆரம்ப அறிகுறிகள் மூலமே இது கண்டறியப்படுகிறது.
தைராய்டு புற்றுநோய் குறித்த சமூக விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே பல நோயாளிகள் கண்டறியப் படுவதாலும், ஹைப்போதைராய்டிசம் மற்றும் கோயிட்டர் போன்ற பிற தைராய்டு நோய்களுக்கும் தைராய்டு புற்று நோய்க்கும் இடையே இன்னும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் சரியான சிகிச்சையை தாமதப்படுத்த காரணமாகிறது.
சன்வே மருத்துவ மையத்தின் மார்பக மற்றும் நாளமில்லாச் சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வோங் மெய் வான் மற்றும் அணுக்கரு மருத்துவ நிபுணர் டாக்டர் டான் டெய்க் ஹின் ஆகியோர் தைராய்டு புற்றுநோயின் தன்மை, அதன் ஆரம்ப அறிகுறிகள், கண்டறியும் முறைகள், நவீன சிகிச்சை தேர்வுகள் மற்றும் நீண்ட காலப் பின்தொடர் சோதனைகளின் முக்கியத்துவம் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
"தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு அவசியமான தைராக்சின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. தைராக்சின் அதிகமாகச் சுரந்தால், ஒருவருக்கு அமைதியின்மை மற்றும் அதிக ஆற்றல் ஏற்படலாம், அதே நேரத்தில் இந்த ஹார்மோன் குறைவாக சுரந்தால் குளிர், சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்," என்று டாக்டர் வோங் கூறினார்.
இருப்பினும், தைராய்டு புற்று நோய்க்கும் ஹார்மோன்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
"பெரும்பாலான தைராய்டு புற்றுநோய் நோயாளிகளுக்கு தைராய்டு செயல்பாடு சாதாரணமாகவே இருக்கும். புற்றுநோய் என்பது பொதுவாக சுரப்பியில் ஏற்படும் ஒரு கட்டி அல்லது கணு ஆகும். தைராய்டு புற்றுநோய் ஹைப்பர் தைராய்டிசம் அல்லது ஹைப்போதைராய்டிசத்தை ஏற்படுத்தாது, அதேபோல் அந்த நோய்களும் தைராய்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பது அவசியமில்லை," என்று டாக்டர் டான் விளக்கினார்.
மற்ற புற்று நோய்களைப் போலல்லாமல், மலேசியாவில் தைராய்டு புற்று நோய்க்கும் புகைப்பிடித்தல் போன்ற வாழ்க்கை முறை காரணிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை, ஆனால் குடும்ப வரலாறு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.
"சில வகை தைராய்டு புற்று நோய்கள் மரபணுக்களால் ஏற்படுகின்றன, ஆனால் அனைத்தும் அல்ல. குறிப்பிடத்தக்க குடும்ப வரலாறு இருந்தால் மட்டுமே நாங்கள் மரபணு சோதனை செய்வோம்," என்று கூறிய டாக்டர் வோங், தனது நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்றும், இது உலகளாவிய போக்கைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சுகாதாரப் பரிசோதனைத் திட்டங்கள் மூலம் மலேசியாவில் பெரும்பாலான தைராய்டு புற்றுநோய் வழக்குகள் இப்போது நிலை 1-இல் கண்டறியப் படுவதாக டாக்டர் டான் கூறினார்.
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலான தைராய்டு வழக்குகள் நிலை 3 அல்லது 4 போன்ற இறுதிக் கட்டங்களில் மட்டுமே கண்டறியப்பட்டன. இந்த மாற்றம் மிகவும் ஊக்கமளிக்கும் வளர்ச்சியாகும்," என்றார் அவர்.
சுமார் 85 விழுக்காடு தைராய்டு புற்று நோய்கள் (குறிப்பாக பாப்பில்லரி அல்லது ஃபோலிகுலர் வகைகள்) மெதுவாகப் பரவக்கூடியவை மற்றும் சிகிச்சைக்கு நன்கு பதிலளிக்கக் கூடியவை. ஆனால், நோய் நிலை 4-ஐ அடைந்து நுரையீரல் அல்லது எலும்புகளுக்குப் பரவி விட்டால், உயிர் வாழும் விகிதம் 50 விழுக்காட்டிற்கும் கீழே குறைகிறது.
சிகிச்சை பொதுவாக அறுவை சிகிச்சையுடன் தொடங்குகிறது என்று டாக்டர் டான் கூறினார்.
"கட்டி அகற்றப்பட்ட பிறகு, அது எவ்வளவு தீவிரமானது என்பதை நாங்கள் சரி பார்க்கிறோம். அதிக ஆபத்துள்ள கட்டியாக இருந்தால், நாங்கள் வழக்கமாக கதிரியக்க அயோடின் (RAI) சிகிச்சையைத் தொடர்வோம்," என்றார்.
"இது எஞ்சியிருக்கும் புற்றுநோய் செல்களை நீக்குகிறது மற்றும் மறைந்திருக்கும் பரவலைக் கண்டறிய உதவுகிறது. கதிரியக்க அயோடின், நம் உடலில் உள்ள இயற்கை அயோடினைப் போலவே வேதியியல் ரீதியாக உள்ளது. இது பாதுகாப்பானது, நன்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் அரிதாகவே ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. 'கதிரியக்க' என்ற வார்த்தை கவலையை ஏற்படுத்தினாலும், இது வெளிப் புறக் கதிர்வீச்சு சிகிச்சையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது," என்று அவர் விளக்கினார்.
சிகிச்சையின் முடிவுகள் பொதுவாக நன்றாக இருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கூட, குறிப்பாக நிணநீர் முனைகளில், புற்றுநோய் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
"அதனால்தான் நீண்ட காலப் பின்தொடர் சோதனைகள் மிகவும் முக்கியமானவை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிகளுக்கு பொதுவாக வாழ்நாள் முழுவதும் தைராய்டு ஹார்மோன் மாற்று சிகிச்சை தேவைப்படும்."
"இது ஒரு துணை மருந்தை எடுத்துக் கொள்வதைப் போன்றது. இது நன்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது, மேலும் பெரும்பாலான நோயாளிகள் இதற்கு விரைவாகப் பழகி விடுவார்கள்," என்று டாக்டர் வோங் கூறினார்.
நிலை 1 மற்றும் 2 நோயாளிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை, பின்னர் ஐந்து ஆண்டுகள் வரை ஆண்டுதோறும் பரிசோதனை செய்ய டாக்டர் டான் பரிந்துரைக்கிறார். அதன் பிறகு, நோயாளியின் வசதி மற்றும் ஆபத்து அடிப்படையில் பின்தொடர் சோதனைகள் செய்யப் படலாம்.
டைரோசின் கைனேஸ் இன்ஹிபிட்டர்கள் (TKI) போன்ற மருந்துகள், நோய் முற்றிய நிலை அல்லது எதிர்ப்புத் திறன் கொண்ட சந்தர்ப்பங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.
"RAI சிகிச்சை இனி பலனளிக்காத போது இது பயன்படுத்தப்படுகிறது. இது அறுவை சிகிச்சைக்கு முன் கட்டிகளைக் சுருக்குகிறது அல்லது பரவிய நோயைக் கட்டுப் படுத்துகிறது," என்று கூறிய அவர், சோர்வு, தோல் பிரச்சினைகள், புரோட்டினூரியா அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மலேசியாவில் தைராய்டு பரிசோதனை வழக்கமாகச் செய்யப்படவில்லை என்றாலும், பொதுக் கல்வி முக்கியமானது என்பதை இரு மருத்துவர்களும் ஒப்புக்கொண்டனர்.
"உங்கள் கழுத்தில் தொடர்ந்து ஒரு கட்டி இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரைச் சென்று பாருங்கள். அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் எளிமையானவை, எளிதில் அணுகக்கூடியவை, மேலும் பெரும்பாலான கிளினிக்குகளில் செய்யப்படலாம்," என்று டாக்டர் வோங் கூறினார்.
அமைதியான அச்சுறுத்தல், பெரிய பாதிப்பு: மலேசியாவில் தைராய்டு புற்று நோயின் நிதர்சனம்
22 மே 2026, 5:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


