ஷா ஆலம், மே 22 - மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு தனது முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
எனினும், பொதுமக்கள் தங்களின் நிதி நிர்வாகத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, வீண் விரயங்களைத் தவிர்ப்பதன் மூலமும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மாநில மனிதவள, வறுமை ஒழிப்புக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற சிலாங்கூர் சிறுவணிகர்கள் உருமாற்ற உதவித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், உணவுப் பாதுகாப்பு, விநியோக ஸ்திரத்தன்மை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான உதவிகள் ஆகியவற்றில் சிலாங்கூர் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதில் குறைந்த வருமானம் பெறும் சமூகங்களின் அத்தியாவசியத் தேவைகளை, குறிப்பாக உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்காக 'சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பின்' கீழ் 131 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் தட்டுப்பாடு அல்லது விநியோகத் தடைகள் ஏற்படுவதை மாநில அரசு விரும்பவில்லை என்பதால், உணவுப் பாதுகாப்பு போன்ற மிக அடிப்படையான தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.
மேலும் பேசிய அவர், மீனவர்கள், பொதுப் போக்குவரத்துப் பயனாளர்கள் மற்றும் B40 பிரிவினருக்கான உதவித் திட்டங்களைத் தொடர்வதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்கு உணவுப் பொருட்கள் போதுமானதாக இருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளதாகக் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், பொதுப் போக்குவரத்துப் பயனாளர்களுக்கு 30 ரிங்கிட் மானியமும், சந்தை விலையை விட 15 முதல் 30 சதவீதம் குறைவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் 'ஜுவாலான் ஏசான் ரஹ்மா' (Jualan Ehsan Rahmah) மலிவு விற்பனைத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச மோதல்கள் மற்றும் நிலையற்ற பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும், அதே வேளையில் பொதுமக்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்து, சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது, தற்போதைய உலக நெருக்கடியானது மலேசியா தனது நீண்டகால ஆற்றல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும், புதைபடிவ எரிபொருட்களைச் (Fossil Fuels) சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியிருப்பதாக பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் மோதல்கள் ஆகிய இரண்டுமே தயார்நிலை, தழுவல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்த முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளன.
இந்த வகையில், சீனா போன்ற நாடுகள் மின்சார வாகனத் தொழில்நுட்பம் (EV) மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் முதலீடு செய்வதன் மூலம் மிக முன்னதாகவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.







