ஷா ஆலம், மே 22 - சிலாங்கூர் மாநில அரசின் ‘பிளாட்ஸ் மாசுக் பசார்’ (PLATS Masuk Bazar) திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டு ரமலான் மாதத்தில் மட்டும் 9.7 மில்லியன் ரிங்கிட் விற்பனை பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட 7 மில்லியன் ரிங்கிட் வருவாயோடு ஒப்பிடுகையில், இது மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அக்ரோபேங்க் (Agrobank) நிதியகத்துடன் இணைந்து சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து ஊராட்சி மன்றங்களின் கீழ் உள்ள ரமலான் சந்தைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இக்காலகட்டத்தில், ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை (Cashless Transactions) முறையின் கீழ் சுமார் 8 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விற்பனை வருவாயில், செலாயாங் நகராட்சி மன்றம் (MPS) 1.9 மில்லியன் ரிங்கிட்டைப் பதிவு செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (MBSA) 1.4 மில்லியன் ரிங்கிட் வருவாயுடன் அடுத்த இடத்தைப் பெற்றுள்ளது.
அதே வேளையில், கிராமப்புறப் பகுதியைக் கொண்ட சபாக் பெர்ணம் நகராண்மை கழகமும் (MDSB) இம்முறை ரமலான் சந்தை காலத்தில் சுமார் 6 லட்சம் ரிங்கிட் விற்பனையைப் பதிவு செய்து, மிகவும் ஊக்கமளிக்கும் வகையிலான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
இத்தகைய வருவாய் அதிகரிப்பானது, உள்நாட்டு வியாபாரிகள் மற்றும் சிறு தொழில்முனைவோர் மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ரொக்கமில்லா பணப்பட்டுவாடா முறைகள் மிக வேகமாகப் பிரபலமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி பேசுகையில், ‘அக்ரோபேங்க் 2026 ரமலான் பசார் ரொக்கமில்லா பரிவர்த்தனைப் பரிசு வழங்கும் விழாவில்’ கலந்து கொண்ட பின்னர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு வலுசேர்க்கும் வகையில் முதன்முதலாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக வருமானம் ஈட்டுவதற்கு உதவும் நோக்கில் 'பிளாட்ஸ் 2.0' (PLATS 2.0) மேம்படுத்தப்பட்டது.
மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மந்திரி புசார் அறவாரியம் (MBI), மாநிலத்தின் 12 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தலா 5 ரிங்கிட் மதிப்புள்ள 20,000 'ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்களை' விநியோகம் செய்து, 'பிளாட்ஸ் மாசுக் பாசார்' பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டிற்கான 'யு-பிளாட்ஸ்' (U-PLATS) திட்டத்தில் பங்கேற்பதற்காகச் சிலாங்கூர் மாநிலத்தின் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலிருந்தும் தலா 200 தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முகமட் நஜ்வான் தெரிவித்தார்.
இத்திட்டம் பிளாட்ஸ் மற்றும் சிலாங்கூர் இளைஞர் சமூகம் (SAY) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவோருக்குத் தற்கால சந்தைப்படுத்தல் முறைகள், சமூக ஊடகத் தளங்களின் வழியே வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் நவீன வணிகத் திறன்கள் குறித்து முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.
மாநில அரசின் இத்தகைய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தொடர் ஆதரவை வழங்கி வரும் அக்ரோபேங்க், யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (UPEN) ஆகிய வியூகக் கூட்டாளிகளுக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் நஜ்வான் ஹலிமி தெரிவித்துக் கொண்டார்.








