மூத்த போலீஸ் அதிகாரி கட்டடத்திலிருந்து விழுந்து மரணமடைந்த சம்பவத்தில் குற்றச் செயல் ஏதுமில்லை

21 மே 2026, 8:37 AM
மூத்த போலீஸ் அதிகாரி கட்டடத்திலிருந்து விழுந்து மரணமடைந்த சம்பவத்தில் குற்றச் செயல் ஏதுமில்லை

ஷா ஆலம், மே 21: சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் (IPK) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி நேற்று இங்குள்ள செக்‌ஷன் 14-இல் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், இதுவரை எந்த குற்றச் செயலும் கண்டறியப்படவில்லை.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் இந்தத் தகவலை உறுதிப் படுத்தினார். இந்தச் சம்பவம் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து என்றும், 42 வயதான ஏ.எஸ்.பி (ASP) அந்தஸ்திலான அந்த அதிகாரி கட்டிடத்தின் எட்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என நம்பப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை இந்த விவகாரம் திடீர் மரணம் (SDR) என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

"அன்னாரின் உடல் நேற்று பகாங், குவாந்தானில் உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது," என்று இன்று சிலாங்கூர் ஐ.பி.கே (IPK) மூத்த அதிகாரிகள் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், உயிரிழந்த அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் நற் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு தேவையற்ற யூகங்களையும் பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும் ஷசெலி அறிவுறுத்தினார்.

"உண்மையற்ற மற்றும் அவதூறான கருத்துகள் பரப்பப் பட்டால், அது குறித்து போலீசில் புகார் அளிக்க முடியும். அதன் பேரில் கடுமையான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்," என்று அவர் மேலும் எச்சரித்தார்.

சிலாங்கூர் ஐ.பி.கே குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று இங்குள்ள செக்‌ஷன் 14-இல் உள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து மரணமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.