சுடப்பட்ட காசா உதவிப் பேரணி ஆர்வலர் இஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுப்பு

21 மே 2026, 4:38 AM
சுடப்பட்ட காசா உதவிப் பேரணி ஆர்வலர் இஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுப்பு

இஸ்தான்புல், மே 21: காசாவை நோக்கிச் சென்ற 'குளோபல் சுமுத் புளோட்டிலா' (GSF) உதவிப் பயணக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்வலர் மஜித் பாக்சிவன், இஸ்ரேலிய ராணுவம் சுட்ட ரப்பர் தோட்டா பட்டு காலில் காயமடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர் என அனடோலு அஜான்சி (AA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட்டில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதிலும், இஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற பாக்சிவன் மறுத்துவிட்டதாக அந்த உதவிப் பயணக் குழு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை தொடக்கத்தில் இஸ்ரேலிய அரசாங்கக் கூட்டணிக் கட்சி உறுப்பினரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடாமர் பென்-கியுவிர் பகிர்ந்த ஒரு காணொளியில், துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் அந்த ஆர்வலர் அவமானப் படுத்தப்படுவது பதிவாகியுள்ளது.

இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகெவ் பதிவேற்றிய மற்றொரு காணொளியில், அந்த ஆர்வலரை "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்" என்றும் "மதுபோதையில் பிதற்றுபவர்" என்றும் வர்ணித்துள்ளார்.

44 நாடுகளைச் சேர்ந்த 428 பேருடன் (78 துருக்கியர்கள் உட்பட) சென்ற மொத்தம் 50 படகுகளை திங்கட்கிழமை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலியப் படையினர் தாக்கியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

2007 ஆம் ஆண்டு முதல் காசா மீது இஸ்ரேல் விதித்துள்ள சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய முயற்சியாக, துருக்கியின் மர்மாரிஸ் மாவட்டத்திலிருந்து வியாழக்கிழமை இந்தப் படகு அணி புறப்பட்டது.

இந்தப்  படகு அணி  சம்பந்தப்பட்ட இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், கிரீஸ் நாட்டின் கிரீட் தீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தொண்டுப்  படகு அணியைத் தாக்கியது. அப்போதைய பயணத்தில் 39 நாடுகளைச் சேர்ந்த 345 பேர் பங்கேற்றனர், அதில் துருக்கியர்களும் அடங்குவர்.

2007 ஆம் ஆண்டு முதல் காசா முனையின் மீது இஸ்ரேல் கடுமையான முற்றுகையை விதித்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 2.4 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.