ஷா ஆலம், மே 21: பொதுப் போக்குவரத்துப் பயணிகள் மை 50 (My50) மாதாந்திர பயண அட்டை மூலம் மாதம் ரிம.300 வரை சேமிக்க முடிவதாக தெரிவித்தனர். இருப்பினும், நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீடியா சிலாங்கூர் சந்தித்த சியாவோ பிங் (வயது 33), சொந்தமாக வாகனம் ஓட்டிச் செல்வதைக் காட்டிலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் மாதம் ரிம.200 முதல் ரிம.300 வரை செலவைச் சேமிக்க முடிவதாக கூறினார்.
"சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினால், பெட்ரோல் மற்றும் இதர கட்டணங்களால் செலவு அதிகமாகும். நான் பூச்சோங்கிலிருந்து இங்கு வருவதால், ரிம.50 பாஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் ரிம.200 முதல் ரிம.300 வரை சேமிக்க முடிகிறது," என்றார் அவர்.
ஒரு வங்கியில் பணிபுரியும் அவர், ரேபிட் கேஎல் (Rapid KL) ரயில் சேவைகளின் எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுப் போக்குவரத்து தடங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். "ரயில்கள் அடிக்கடி இயக்கப்பட வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேபோல் சேவையை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
இதையே வலியுறுத்திய எஸ்.கே. மோகன் (27), மை 50 பாஸ் தனது பெட்ரோல் மற்றும் இதர அன்றாடச் செலவுகளைக் குறைக்க பெரிதும் உதவுவதாகத் தெரிவித்தார்.
"என்னைப் பொறுத்தவரை, மை 50 மிகவும் பயனுள்ளது. இது பெட்ரோல் போன்ற அனைத்துச் செலவுகளையும் குறைக்கிறது. ஒரு மாதத்திற்கு நாம் வெறும் ரிம.50 மட்டுமே செலுத்துகிறோம். அதே வேளையில், பயணத்தடங்கள் குறைவாக இருப்பது ஒரு முக்கியப் பிரச்சினையாகும். எனவே சேவையை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்," என்றார்.
சென் (23) எனும் மற்றொரு மை 50 பாஸ் பயனர், பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவது வாகன நெரிசலைத் தவிர்க்கவும் பெட்ரோல் மற்றும் வாகன நிறுத்துமிடக் (பார்க்கிங்) கட்டணங்களைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறினார்.
"வாகன நெரிசலும், செலவுகளும் தொடர்ந்து அதிகரிப்பதால் கார் ஓட்டிச் செல்வதை நான் தவிர்த்து விடுகிறேன். மை 50 மூலம் பல இடங்களுக்குச் செல்ல முடிகிறது, இது உண்மையில் பெரும் சேமிப்பாகும்," என்று அவர் கூறினார்.
இருப்பினும், நெரிசல் நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க காஜாங் நோக்கிய ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். "மாலையில் காஜாங் செல்லும் ரயில்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது, இதனால் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவது செலவை மட்டுமின்றி நேரத்தையும் மிச்சப் படுத்துவதாகப் பயணிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் ரயில்களில் பெருகி வரும் கூட்டம் பயணிகளைப் பாதித்தாலும், பொதுப் போக்குவரத்து தொடர்ந்து செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது என்று ஸ்டெஃபனி (35) தெரிவித்தார்.
"பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சாலைப் போக்குவரத்து நெரிசல் மிகவும் மோசமாக உள்ளது. ரயில் பெட்டிகளில் எப்போதும் கூட்டமாகவே உள்ளது. ஆனாலும் இது நிறைய பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. ரயில்களில் ஏற்படும் பழுதுகள் எங்களைப் பாதிக்கின்றன, எனவே அவர்கள் அடிக்கடி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
எல்லையற்ற பயணத்தை வழங்கும் மை 50 பாஸ் மூலம் அதிக செலவு மிச்சமாகிறது என்பதை நிடாஷிமா பஹாரூடின் (33)-உம் ஒப்புக்கொண்டார்.
"ஏனெனில் இது ஒரு எல்லையற்ற சேவை. எனவே, தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கு இது உண்மையில் நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது," என்று அவர் தெரிவித்தார்.
மை 50 மாதாந்திர பாஸ் மூலம் மாதம் ரிம 300 வரை சேமிக்க முடிகிறது; ஆனால் ரயில்களின் சேவையை அதிகரிக்க கோரிக்கை
21 மே 2026, 4:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





