RON97, மானிய உதவியில்லாத RON 95 மற்றும் டீசல் விலை உயர்வு

21 மே 2026, 1:43 AM
RON97, மானிய உதவியில்லாத RON 95 மற்றும் டீசல் விலை உயர்வு

கோலாலம்பூர், மே 21: தீபகற்ப மலேசியாவில் RON97, மானிய உதவியில்லாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை மே 21 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் லிட்டருக்கு முறையே 15 சென், 20 சென் மற்றும் 10 சென் உயர்கிறது.

நிதி அமைச்சகம் (MOF) வெளியிட்ட அறிக்கையின்படி, RON97 சில்லறை விலை இதற்கு முன் லிட்டருக்கு RM4.70 ஆக இருந்த நிலையில் தற்போது RM4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மானிய உதவியில்லாத   RON95-இன் விலை RM3.87-லிருந்து RM4.07 ஆக அதிகரித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை இதற்கு முன் RM4.87 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு RM4.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய சில்லறை விலை திருத்தமானது தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை (APM) சூத்திரத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே காலக் கட்டத்தில், மடாணி அரசாங்கம் குறிப்பிட்ட தரப்பினர் மற்றும் துறைகளுக்கான இலக்கு மானிய விலைகளைத் தொடர்ந்து நிலை நிறுத்தியுள்ளது. அதன்படி, RON95 (BUDI 95) லிட்டருக்கு RM1.99 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும், மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் லிட்டருக்கு RM2.05 ஆகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, மானியமில்லாத RON95-இன் தற்போதைய விலை லிட்டருக்கு RM4.07 ஆக இருப்பதால், 200 லிட்டர் பயன்பாட்டிற்கு RM814 செலவாகும்.

இதன் அடிப்படையில், BUDHI 95-இன் கீழ் முழு தகுதியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பெறுநருக்கும், RON95-இன் உண்மையான செலவில் பாதிக்கும் மேலான தொகையான RM416-ஐ மடாணி அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.

"பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பீப்பாய்க்கு சுமார் 110 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது மோதலுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த 70 அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் சுமார் 60 விழுக்காடு அதிகமாகும்."

அதே வேளையில், மோதல் நடைபெறும் மண்டலங்கள் வழியாக கப்பல் போக்குவரத்தில் உள்ள அபாயங்களால் தளவாடச் செலவுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இது பெட்ரோலிய பொருட்களின் விலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

"தொடரும் மோதல்களால் உலகளாவிய எண்ணெய் விநியோகத் தடைகளும் தீவிரமடைந்துள்ளன. உலகின் 20 விழுக்காடு பெட்ரோலிய விநியோகத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி (Selat Hormuz) முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. மேலும், மேற்கு ஆசியாவில் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரி செய்ய நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எனவே, நிலையற்ற உலகளாவிய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் விநியோக இருப்பை உறுதி செய்ய மக்கள் தொடர்ந்து எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மடாணி அரசாங்கம் வலியுறுத்துவதாக நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.