நாடு தழுவிய அமலாக்க நடவடிக்கைகளில் 16,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது

20 மே 2026, 8:32 AM
நாடு தழுவிய அமலாக்க நடவடிக்கைகளில் 16,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது

புத்ராஜெயா, மே 20 – கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை மே 15-ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட 4,785 அமலாக்க நடவடிக்கைகளில், பல்வேறு குற்றங்களுக்காக 16,681 வெளிநாட்டினரைக் குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் தனது துறை இன்னும் தீவிரமான முறையில் சோதனைகளை மேற்கொண்டு மொத்தம் 69,406 நபர்களிடம் ஆவணச் சோதனைகளை நடத்தியுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுச் சட்டம் மற்றும் அதன் கீழ் உள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் அல்லது தவறாகப் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்தத் தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான குடிநுழைவுத்துறையின் சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டின் நிரந்தர குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 20,575 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில், மேலும் 1,470 பேர் தற்காலிக முகாம்களில் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 14-ஆம் தேதி நிலவரப்படி 19,700 வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 7,936 பேருடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் 4,005 பேரும், வங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் 2,453 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் 1,825 பேரும் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் 1,008 பேருமாக அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்ந்து, 'மைகிரண்ட் ரிபாட்ரியேஷன் புரோகிராம் 2.0' (Migrant Repatriation Programme 2.0) எனும் சட்டவிரோதக் குடியேறிகளைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட சகாரியா, இத்திட்டம் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள், தன்னார்வத்துடன் சொந்த நாடு திரும்புதல் மற்றும் அபராதத் தொகை வசூல் எனப் பல முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது என்றார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி தொடங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 17-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 112 நாடுகளைச் சேர்ந்த 257,443 சட்டவிரோதக் குடியேறிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்றும், இதன் மூலம் 128 மில்லியன் 726,940 ரிங்கிட் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.

இதில் அதிகபட்சமாக இந்தோனேசியாவைச் சேர்ந்த 111,660 பேரும், வங்களாதேஷைச் சேர்ந்த 49,481 பேரும், மியன்மாரைச் சேர்ந்த 33,858 பேரும் பதிந்துள்ள வேளையில், இந்தத் திட்டம் நாட்டில் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விருது வழங்கும் விழா குறித்துப் பேசிய டத்தோ சகாரியா ஷாபான், கடந்த ஆண்டில் மிகச் சிறந்த சேவையை வழங்கியதற்காக மொத்தம் 1,212 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தங்களின் பணிகளில் அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாகவும், உலகத் தரத்திலான மிகச் சிறந்த சேவையைப் பொதுமக்களுக்கு வழங்குவதை இலக்காகக் கொண்டு, இன்னும் சிறப்பாகப் பணியாற்ற இந்த அங்கீகாரம் அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.