ருக்குன் நெகாராவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளார் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ

20 மே 2026, 7:41 AM
ருக்குன் நெகாராவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளார் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ

ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ, மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் ஆணையை சிரமேற்கொண்டு, தனது கடமைகளை ஆற்றுவதில் ருக்குன் நெகாராவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதிலும், ருக்குன் நெகாராவின் கோட்பாடுகள் எப்போதும் தனக்கு வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும், அடிப்படைக் கொள்கையாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

"மாட்சிமை தங்கிய சுல்தான் 
ஷாராபுடின் இட்ரிஸ் ஷா  அல்ஹாஜ் இப்னி அல்மார்ஹூம் சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹாஜின் ஆணையை நான் உயர்வாக மதிக்கிறேன்."

"ஒரு மக்கள் பிரதிநிதியாக, ருக்குன் நெகாராவின் கோட்பாடுகள் எப்போதும் எனது நம்பிக்கையைச் சுமந்து செல்வதற்கும், அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கும் வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும், அடிப்படைக் கொள்கையாகவும் இருந்து வருகிறது," என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர் மற்றும் மலேசிய மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒவ்வொரு செயலிலும் இந்த கோட்பாடுகளைத்  எப்போதும் பின்பற்றுவேன் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

மக்களின் ஒற்றுமை  அடித்தளமாகக்  கொண்ட  ருக்குன் நெகாராவின் அடிப்படைக் கோட்பாடுகளை படித்து, அதன் அர்த்தத்தை ஆழமாக புரிந்து கொள்ள, குறிப்பாக இளைய தலைமுறையினரை சிலாங்கூர் சதுக்கத்திற்கு வருமாறு நேற்று சிலாங்கூர் சுல்தான் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், மாதத்திற்கு இரண்டு முறை சிலாங்கூர் சதுக்கத்திற்கு வருகை தந்து, அங்குள்ள நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள ருக்குன் நெகாராவின் அர்த்தத்தைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு சிலாங்கூரின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் மாட்சிமை தங்கிய சுல்தான் கேட்டுக்கொண்டார்.

இதேவேளையில், ருக்குன் நெகாரா மற்றும் தேசிய விழுமியங்களைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு சுல்தான் ஷாராபுடின் விடுத்த நினைவூட்டலுக்கு சிலாங்கூர் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோணி லியூ தனது ஆதரவைத் தெரிவித்தார்.

“அரசியல்வாதிகள் மாதத்திற்கு இரண்டு முறை சிலாங்கூர் சதுக்கத்திற்கு வந்து மக்களைச் சந்தித்து, ருக்குன் நெகாராவை மீண்டும் ஒருமுறை நினைவுகூர வேண்டும் என்ற மாட்சிமை தங்கியவரின் ஆணை, ஒரு சம்பிரதாயமான அல்லது வெறும் சடங்கு ரீதியான செயல்பாடு மட்டுமல்ல.”

“மாறாக, அனைத்து அரசியல்வாதிகளையும் நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்பச் செல்லும்படி நினைவூட்டும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது,” என்று அவர் முகநூலில் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.