கோத்தா கெமுனிங்கில் ‘ஸ்கிம் கைராட் டாருள் ஏசான்’ திட்டப் பதிவுக்கு நடமாடும் கவுண்டர்கள் ஏற்பாடு

20 மே 2026, 3:26 AM
கோத்தா கெமுனிங்கில் ‘ஸ்கிம் கைராட் டாருள் ஏசான்’ திட்டப் பதிவுக்கு நடமாடும் கவுண்டர்கள் ஏற்பாடு

ஷா ஆலம், மே 20 – கோத்தா கெமுனிங் தொகுதி மக்கள் ‘ஸ்கிம் கைராட் டாருள் ஏசான்’ (KDE) எனும் மரணச் சகாய நிதித் திட்டத்தில் எளிதாகப் பதிவு செய்வதை உறுதி செய்யும் நோக்கில், எதிர்வரும் ஜூன் 13-ஆம் தேதி வரை பல முக்கிய இடங்களில் நடமாடும் சேவை கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த மே 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையானது, தகுதியுடையவர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (OKU) இந்த நலத்திட்டத்தின் பலன்களை எவ்வித சிரமமுமின்றி பெறுவதற்கு வழிவகுக்கும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான பதிவானது, கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடமாடும் கவுண்ட்டர்கள் தவிர்த்து, பொதுமக்கள் KDE இணையத்தளம் வழியாகவோ அல்லது அதிகாரப்பூர்வ போஸ்டர்களில் உள்ள 'கியூ ஆர்' (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ தங்களை இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் பொதுமக்கள், கோத்தா கெமுனிங் சட்டமன்ற அலுவலகத்தை 03-5131 4354 என்ற எண்ணிலோ அல்லது 011-1257 5460 என்ற வாட்ஸ்அப் எண் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மேம்படுத்தப்பட்ட இந்த KDE திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் காலமானால், அவரது குடும்பத்தாருக்கு 1,000 ரிங்கிட் மரணச் சகாய நிதி வழங்கப்படும் என்பதோடு, கூடுதல் நிதியுதவியாக மேலும் 1,000 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 'ஸ்கிம் மெஸ்ரா ஊசியா ஏமாஸ்' (SMUE) திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கான இந்த மரணச் சகாய நிதி உதவி கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறுத்தப்பட்டது.

எனினும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த 2021-ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, வாரிசுகளுக்கு 500 ரிங்கிட் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது மேலும் சீரமைக்கப்பட்டுள்ள இந்த KDE திட்டம், மாநில அரசின் மக்கள் நலக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அதிகப்படியான இழப்பீட்டுத் தொகையையும் பரந்த அளவிலான இலக்குக் குழுக்களையும் உள்ளடக்கியுள்ளது.

அந்த வகையில், நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில், தகுதியுள்ள வாரிசுகளுக்கு 1,000 ரிங்கிட் மரணச் சகாய நிதியைத் தொடர்ந்து வழங்குவதற்காக, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி 15 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் அதிகாரப்பூர்வ 'யாவாஸ்' (YAWAS) KDE இணையத்தளத்தின் மூலமாகவும் மேற்கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

KDE DUN Kota Kemuning

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.