மலேசியாவில் 94,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பதிவு

20 மே 2026, 2:18 AM
மலேசியாவில் 94,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பதிவு

கோலாலம்பூர், மே 20: மலேசியாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலக்கட்டத்தில், நாட்டில் பதிவு செய்யப்பட்ட ‘பேட்டரி மின்சார வாகனங்களின்’ (BEV) ஒட்டுமொத்த எண்ணிக்கை 94,165 யூனிட்டுகளை எட்டியுள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது இனிமேலும் வெறும் உலகளாவிய ஒரு நாகரிகப் போக்கு மட்டுமல்ல என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாதில்லா யூசுப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக, அது முதலீடு, தொழில் துறைக்கான போட்டித்தன்மை, நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றோடு நேரடியாகத் தொடர்புடைய ஒரு மூலோபாயத் தேவையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மலேசியாவின் மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுச் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, தேசிய மின்சார வாகன வழிகாாட்டுக் குழுவின் (NEVSC) 2026-ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டம் நேற்று ‘மித்தி’ (MITI) கோபுரத்தில் துணைப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், நாட்டின் மின்சார வாகனப் பயன்பாட்டில், குறிப்பாகப் பேட்டரி மின்சார வாகனப் பிரிவில் மலேசியா அடைந்துள்ள இந்த முன்னேற்றம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் மாற்றுத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப், நாட்டின் மின்சார வாகனத் தொழில்துறையை மேலும் முற்போக்கான, ஒருங்கிணைந்த மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த முறையில் மேம்படுத்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

அதற்கேற்ப, மலேசியாவின் மின்சார வாகனச் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்காக, மிகக் குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தக்கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் வலுவான தீர்வுகளைக் கண்டறிவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.