புத்ராஜெயா, மே 19: நாட்டின் பல்கலைக்கழகங்கள் வெறும் ஆய்வகங்களோடு அல்லது கல்வி இதழ்களோடு (Journal) நின்றுவிடாமல், சமுதாயத்திற்கும் தொழில்துறைக்கும் உண்மையான தீர்வுகளை வழங்கும் உயர்தர கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தளங்களாக மாற வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடிர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் செர்டாங்கில் உள்ள புத்ரா மலேசியப் பல்கலைக்கழகத்தில் (UPM) நடைபெற்ற "பல்கலைக்கழகங்கள் மற்றும் துணிகர மூலதன முதலீட்டாளர்களுக்கான கலந்துரையாடல்" எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூர் பல்கலைக்கழகங்களின் பல ஆராய்ச்சி முடிவுகள் மிக உயர்ந்த ஆற்றலைக் கொண்டிருந்தாலும், நிதி பற்றாக்குறை, உத்திப்பூர்வ ஆதரவு மற்றும் முதலீட்டு சூழல் அமைப்பைப் பெறுவதில் உள்ள சவால்கள் போன்றவற்றால் அவை தேக்கமடைவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் இன்னும் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதே அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள யு.பி.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அகமட் ஃபர்ஹான் முகமட் சாடுல்லா, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் தொழில்துறைக்கும் சமுதாயத்திற்கும் உண்மையான நன்மைகளைத் தருவதை உறுதிசெய்யும் வகையில், தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளதாகக் கூறினார்.
யு.பி.எம் பல்கலைக்கழகமும் மலேசிய தனியார் மூலதன சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தத் திட்டம், பல்கலைக்கழகங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே பரந்த ஒத்துழைப்பிற்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது.
மேலும், இது 2026ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முதலீட்டு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய ஆயத்தப் பணியாகும்.
பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், துணிகர மூலதன முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்த இந்த மேடை, நிதியுதவிகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிப்பதற்கும், பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.








