லெம்பா சுபாங் 1 பிபிஆர் வீடுகளின் வாடகை உயர்வு குறித்து மறுபரிசீலனை - சிலாங்கூர் அரசு

18 மே 2026, 6:30 AM
லெம்பா சுபாங் 1 பிபிஆர் வீடுகளின் வாடகை உயர்வு குறித்து மறுபரிசீலனை - சிலாங்கூர் அரசு

ஷா ஆலம், மே 18 – பெட்டாலிங் ஜெயாவில் உள்ள லெம்பா சுபாங் 1 மக்கள் வீட்டுவசதித் திட்ட (PPR) குடியிருப்புகளின் வாடகை விகிதங்களை மறுபரிசீலனை செய்யச் சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தங்களின் சேவை விநியோகத்தை வலுப்படுத்தவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் நீண்ட காலப் பராமரிப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதித் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்திய பிறகே வாடகை உயர்வு குறித்த எந்தவொரு முடிவும் அமல்படுத்தப்படும் என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாடகை விகிதங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னதாக, அங்கு வாழும் பொதுமக்களுடன் முறையான கலந்துரையாடல் அமர்வுகள் (public engagement sessions) நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடமிருந்து (KPKT) இந்த பிபிஆர் வீட்டு நிர்வாகத்தைச் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாகத் தன் வசம் ஈர்த்துக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் முதலில் இந்த நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் போது, அங்குள்ள மக்களுக்கு மிகச்சிறந்த சேவைகளை வழங்குவோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் குடியிருப்பாளர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்வோம்.

மக்கள் தங்களின் சுற்றுப்புறத்தில் சிறந்த சேவைகள், தூய்மையான சூழல், முறையான பராமரிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கண்கூடாகப் பார்க்கும் வகையில் முதலில் உள்கட்டமைப்புகளை நாங்கள் தரம் உயர்த்துவோம்," என்று உறுதியளித்தார்.

அதே வேளையில், தகுதி வாய்ந்த உண்மையான வாடகைதாரர்களுக்குப் பதிலாக, சில வீடுகள் மூன்றாம் தரப்பினருக்குச் சட்டவிரோதமாக உள்வாடகைக்கு (subletting) விடப்பட்டிருக்கும் விவகாரமும் தங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த மக்கள் வீட்டுவசதித் திட்டத்தின் பலன்கள் உண்மையாகவே தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய, குடியிருப்பாளர்களுடனான நேரடிச் சந்திப்புகள் மற்றும் வாடகைதாரர் சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதனுடன், குடியிருப்பாளர்கள் வீட்டு விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதையும் அவர்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தப் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் அங்கு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தம் 3,004 வீட்டு அலகுகளைக் கொண்டுள்ள இந்த மாபெரும் குடியிருப்புத் திட்டத்தை, கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘சிலாங்கூர் ஹவுசிங் அண்ட் பிராப்பர்ட்டி’ (PHSSB) நிறுவனம் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததில் இருந்து, அங்குள்ள வாடகை வசூல் விகிதம் தற்போது 60 சதவீதத்தை எட்டியுள்ளது என்று டத்தோ போர்ஹான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த வாடகை வசூல் விகிதத்தை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.

சுமார் 26 ஆண்டுகள் பழமையான இந்த லெம்பா சுபாங் 1 குடியிருப்பின் ஒட்டுமொத்த பராமரிப்புத் தரத்தை உயர்த்துவதே இந்த நிர்வாகப் பொறுப்பேற்பின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கிடையில், குப்பை மேலாண்மை, கட்டிடங்களுக்குப் புதிய வண்ணம் பூசுதல், மின்தூக்கி (lift) பழுதுபார்ப்பு மற்றும் தண்ணீர் தொட்டிகளைச் சீரமைத்தல் போன்ற பலதரப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை மாநில அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

முன்பு வசூலிக்கப்பட்ட குறைந்தபட்ச வாடகைத் தொகையானது இக்குடியிருப்பின் அன்றாடப் பராமரிப்புச் செலவுகளுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இருக்கவில்லை என்று டத்தோ போர்ஹான் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய வாடகை வருவாயைக் கொண்டு பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால், மாநில அரசே தனது சொந்த நிதியிலிருந்து கூடுதல் தொகையை வழங்கி இப்பணிகளை ஈடுகட்ட வேண்டியுள்ளது என்றார்.

நடப்பு ஆண்டிற்கான இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (KPKT) 2.3 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.