ஷா ஆலம், மே 18 – மலேசியாவின் சில மாநிலங்களில் இன்று காலை 10:00 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளும் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கெடா, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தில் லங்காவி, கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய மாவட்டங்களும், பகாங் மாநிலத்தில் ரொம்பின் மாவட்டமும் இதனால் பாதிக்கப்படலாம் என அடையாளக் காணப்பட்டுள்ளது.
மேலும், ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் (20 mm) அதிகமான மழைப்பொழிவு பதிவாகி, அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் அல்லது அதற்கான அறிகுறிகள் தென்படும் போதும் மட்டுமே இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
"இந்த எச்சரிக்கையானது ஒரு குறுகிய கால எச்சரிக்கை திட்டமாகும். இது வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்" என்று மெட்மலேசியா தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







