கோலாலம்பூர், மே 16 — பிரதமர் அன்வார் இப்ராஹிம், உலகம் நாளுக்கு நாள் சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், நல்ல ஒழுக்கமும் மனிதநேய மதிப்புகளும் கொண்ட தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என தெரிவித்ததார்.
ஆசிரியர்களின் பொறுப்பு வெறும் அறிவை வழங்குவதில் மட்டுப்படாமல், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்குதல், மனித மரியாதையை நிலைநிறுத்துதல் மற்றும் வாழ்க்கையில் நம்பிக்கையும் இலக்குகளையும் ஊட்டுதல் என்பதையும் உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
“இன்று நாம் ஆசிரியர்களின் சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம். அவர்கள் தேச கட்டுமானத்தின் முதுகெலும்பாக இருந்து, நம் நாட்டின் பண்பு, மதிப்புகள் மற்றும் நாகரிகத்தை வடிவமைக்கின்றனர்.
“உலகளாவிய சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், அறிவையும் மனிதநேய மதிப்புகளையும் ஞானத்தையும் இணைத்து செயல்படக்கூடிய, நல்ல ஒழுக்கம் கொண்ட தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு இன்னும் முக்கியமாகிறது.
இது மடாணி கொள்கையின் நோக்கத்திற்கும் ஏற்பதாகும்,” என்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு Facebook பதிவில் அவர் தெரிவித்தார்.
மேலும், “மதிப்புகளும் ஒழுக்கமும் இல்லாத வளர்ச்சி, திசை தெரியாத முன்னேற்றமாக மட்டுமே இருக்கும்,” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
1970களின் தொடக்கத்தில் Yayasan Anda Akademik அமைப்பை தொடங்கி ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்தையும் அன்வார் நினைவுகூர்ந்தார். அந்த அனுபவம், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்கள் எதிர்கொண்ட எதிர்கால சவால்களை நெருக்கமாக புரிந்து கொள்ள உதவியதாக அவர் கூறினார்.
“அந்த அனுபவம் எனக்கு ஒரு ஆசிரியரின் பணி வெறும் அறிவை கற்பிப்பதல்ல; தன்னம்பிக்கையை உருவாக்குவது, மனித மரியாதையை காப்பது மற்றும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் இலட்சியத்தையும் விதைப்பது என்பதையும் கற்றுத்தந்தது,” என்றார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக செயல்படும் அனைத்து கல்வியாளர்களுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.“அனைத்து ஆசிரியர்களும் நாட்டை மேலும் முன்னேற்றமான, வளமான மற்றும் நிலையான மலேசியாவாக உருவாக்கும் பணியில் தொடர்ந்து வலிமை, மன உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட இறைவன் அருள் புரிவானாக,” என்று அவர் கூறினார்.








