கோலாலம்பூர், மே 15 – யதார்த்தத்திற்குப் புறம்பான பணிச்சுமை, பணியிட பகடிவதை (Buli) அல்லது அச்சுறுத்தல்கள் காரணமாகப் பணியாளர்கள் கடுமையான மனச்சோர்வு அல்லது 'பர்ன்அவுட்' (Burnout) பாதிப்புக்கு உள்ளானால், அந்தப் பணியிடத்தைப் பாதுகாப்பான ஒன்றாகக் கருத முடியாது என்று மனநல ஆலோசனைக் குழு உறுப்பினர் தான்ஸ்ரீ லீ லாம் தை தெரிவித்துள்ளார்.
'எம்ப்ளாய்மென்ட் ஹிரோ' (Employment Hero) நிறுவனத்தின் 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான பணியிட நல்வாழ்வு அறிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், மலேசியப் பணியாளர்களிடையே மனச்சோர்வு பாதிப்பானது கடந்த 2022-இல் 58 சதவீதமாக இருந்த நிலையில், அது 2024-இல் 67 சதவீதமாக உயர்ந்துள்ளது மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல என்றும், வழுக்கும் தரை அல்லது இயந்திரக் கோளாறுகளைப் போன்றே பணியிடத்தில் உள்ள ஒரு உளவியல் ரீதியான ஆபத்து (Psychosocial Risk) என்றும் அவர் வர்ணித்தார்.
பணியிடத்தில் பாதுகாப்பாகவும் திறம்படவும் செயல்பட உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அல்லது அதைவிடக் கூடுதலாக மன ஆரோக்கியமும் முக்கியமானது என்று கூறிய அவர், நாள்பட்ட மன அழுத்தம் என்பது இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் மற்றும் தூக்கமின்மை போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.
மேலும், பணியாளர்கள் வேலைக்கு வராமல் இருப்பதை விட (Absenteeism), வேலைக்கு வந்திருந்தும் மனரீதியாகப் பணியில் ஈடுபட முடியாமல் இருக்கும் 'பிரசன்டீசம்' (Presenteeism) என்ற நிலைதான் நிறுவனங்களுக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தவிர்க்க, முதலாளிகள் தங்கள் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆதரவான உளவியல் சூழலை உருவாக்குவது ஒரு கடமையாகும் என்று லீ லாம் தை வலியுறுத்தினார்.
மனநலம் குறித்த திறந்த விவாதங்களை ஊக்குவித்தல், ஆலோசனைகள் மற்றும் பணியாளர் உதவித் திட்டங்களை வழங்குதல், நியாயமான பணிச்சுமை மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை (Work-life balance) உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
அதே வேளையில், 1994-ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் (OSHA) கீழ், பணியிடங்களில் உள்ள உளவியல் ரீதியான அபாயங்களை மதிப்பிட்டு அவற்றைக் குறைக்க வேண்டியது முதலாளிகளின் சட்டப்பூர்வக் கடமையாகும்.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'பணியிட உளவியல் இடர் மதிப்பீடு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்' (PRisMA 2024) முறையை முதலாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.








