புத்ராஜெயா, மே 15 – தேசிய கல்வி முறைக்கு அப்பாற்பட்ட கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் உட்பட, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) நுழைவதற்கு எஸ்பிஎம் (SPM) தேர்வில் மலாய் மொழி மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறுவது தொடர்ந்து ஒரு கட்டாய நிபந்தனையாக இருக்கும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காதிர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தபிக்ஸ் (Tahfiz) கல்வி நிலையங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் (SMPC) பயிலும் மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜாம்ரி, மாணவர்கள் எந்த ஒரு கல்வி முறையின் கீழ் பயின்றிருந்தாலும், அவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியிருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
"ஒரு மாணவர் எந்தப் பிரிவில் பயின்றாலும் எஸ்பிஎம் கட்டாயமாகும். ஏனெனில், நமது பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறையானது (UPUOnline), எஸ்பிஎம் தேர்வு முடிவுகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் பொருள், அந்த மாணவர்கள் தங்களின் சொந்தக் கல்வி முறையிலான தேர்வுகளுடன் சேர்த்து, மலேசியத் தேர்வு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஎம் மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்," என்று அவர் விளக்கமளித்தார்.
அரசாங்கம் மற்ற கல்வி முறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்கலைக்கழக நுழைவுக்கான வாய்ப்புகளைத் திறந்தாலும், தேசியக் கல்வி முறையின் அடிப்படைத் தகுதிகள் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யப்படாது என்று அவர் கூறினார்.
மேலும், அரசாங்கத்தின் இந்த நேர்மறையான முடிவு சில தரப்பினரால் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும், நாட்டின் கல்வி முறையை அரசாங்கம் விட்டுக்கொடுப்பதாகக் கூறப்படும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், நாட்டின் பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகளை (Kolej Komuniti) தற்போதைய காலமாற்றத்திற்கு ஏற்ப ஒரு புதிய நிலைக்கு உயர்த்த அரசாங்கம் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் சாம்ரி தெரிவித்தார்.
"இனிமேலும் பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகளை ஒரு இரண்டாம் நிலை கல்வி நிறுவனங்களாக மட்டும் பார்க்க முடியாது. உலகம் வேகமாக மாறி வருகிறது, அந்த மாற்றத்திற்கு ஏற்ப நமது கல்வி நிறுவனங்களும் மாறாவிட்டால் நாம் பின்தங்கிவிடுவோம்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.







