ஷா ஆலம், மே 14: பண்டான் இண்டா (Pandan Indah) மற்றும் தாமான் வாதான் (Taman Watan) ஆகிய குடியிருப்பு பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களுக்கு எதிராக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட 'ஒப்ஸ் தெர்ஜா: கனரக வாகனங்கள்' (Ops Terjah: Kenderaan Berat) எனும் சிறப்புச் சோதனையின் போது, விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு மொத்தம் 10 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
குடியிருப்பு பகுதிகளில் வாகன நிறுத்துமிட விதிமுறைகளை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை அகற்றவும் நகராண்மை கழகத்தின் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 333), பிரிவு 48(1)-இன் கீழ், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதாக எம்பிஏஜே தெரிவித்தது.
"குடியிருப்பு பகுதிகள் பாதுகாப்பாகவும், சீராகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய இடையூறுகள் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தையும், சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் பாதிப்பதோடு சமூக அமைதியையும் சீர்குலைக்கின்றன," என்று நகராண்மை கழகம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் வாழும் சூழலை மேம்படுத்தவும், பாதுகாப்பான நகரச் சூழலை உருவாக்கவும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எம்பிஏஜே உறுதி அளித்துள்ளது.
இது போன்ற விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் 'சிஸ்பா' (SISPAA) புகார் தளம் வழியாக அல்லது 1-800-22-8100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தகவல்களை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








