ஹன்டா வைரஸ் பரவல்: புதிய மரணங்கள் பதிவாகவில்லை - உலக சுகாதார நிறுவனம் தகவல்

14 மே 2026, 1:59 AM
ஹன்டா வைரஸ் பரவல்: புதிய மரணங்கள் பதிவாகவில்லை - உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா, மே 14: சொகுசுக் கப்பலில் பரவியதாகக் கூறப்படும் ஹன்டா வைரஸ் (Hantavirus) பாதிப்பால் கடந்த மே மாதம் 2-ஆம் தேதிக்குப் பிறகு புதிய மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை. இதனால் உலகளாவிய பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மிகக் குறைவாகவே இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மே மாதம் 12-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 11 பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் எட்டு பேருக்கு 'ஆண்டிஸ் வைரஸ்' (Andes Virus) பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வகச் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய பரவலுக்குக் காரணமான இந்த ஆண்டிஸ் வைரஸ் வகை, ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. குறிப்பாக, மூடிய இடங்களுக்குள் ஒருவருக்கொருவர் நீண்ட நேரமாக நெருக்கமான தொடர்பில் இருக்கும்போது இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது மேலும் ஒருவருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெட்ரோஸ் தெரிவித்தார்.

"உலகளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு இந்த வைரஸால் ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்றே உலக சுகாதார நிறுவனம் தற்போதும் மதிப்பிடுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

எனினும், பாதிக்கப்பட்ட நாடுகளின் நிபுணர்களுடன் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் கப்பல் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உடல்நிலை குறித்த வாராந்திர அறிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.