ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான் பொறுப்பேற்பு

13 மே 2026, 8:09 AM
ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான் பொறுப்பேற்பு

கோலாலம்பூர், மே 13 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) புதிய தலைமை ஆணையராக டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான் இன்று அதிகாரப்பூர்வமாகத் தனது பணியைத் தொடங்கினார்.

கடந்த 42 ஆண்டுகளாக இந்த ஆணையத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, நேற்றுடன் தனது சேவையை நிறைவு செய்த டான் ஸ்ரீ அசாம் பாகிக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்புதிய நியமனம் இன்று முதல் அமலுக்கு வருவதாகத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டத்துறையில் நீண்ட அனுபவமும் நற்பெயரும் கொண்ட டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான், தனது ஆளுமையின் மூலம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவார் என்றும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த ஆணையத்தின் கௌரவத்தை உயர்த்துவார் என்றும் தான் நம்புவதாக ஷம்சுல் அஸ்ரி குறிப்பிட்டார்.

அப்துல் ஹாலிம் அவர்களிடம் நியமனக் கடிதத்தை வழங்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அதே வேளையில், ஓய்வுபெறும் டான் ஸ்ரீ அசாம் பாகிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட தலைமைச் செயலாளர், அவரது தலைமையின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையம் பல சீர்திருத்தங்களையும் மகத்தான வெற்றிகளையும் கண்டதாகப் புகழ்ந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்கச் சேவை என்றும் நினைவுகூரப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமானை ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக நியமிக்க, மாண்புமிகு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.