சுக்மா 2026: சிலாங்கூர் மாநிலத்திற்கு நேரடி நிதி ஒதுக்கீடு இல்லை - மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு

12 மே 2026, 2:51 AM
சுக்மா 2026: சிலாங்கூர் மாநிலத்திற்கு நேரடி நிதி ஒதுக்கீடு இல்லை - மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு

கோலாலம்பூர், மே 12: 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 22-வது மலேசிய விளையாட்டுப் போட்டி (SUKMA) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா சுக்மா' போட்டிகளை ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு, மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு (KBS) நேரடி நிதி ஒதுக்கீடுகளை வழங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, அமைச்சின் கீழ் உள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி இது குறித்து கருத்துரைக்கையில், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் பொறுப்பான நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இம்முடிவிற்கு முன்னதாகவே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு, போட்டிகளை ஏற்று நடத்தும் மாநிலமே அதற்கான செலவினங்களை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனைக்குச் சிலாங்கூர் மாநிலமும் உடன்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

இருப்பினும், சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசுக்குச் சொந்தமான விளையாட்டு வசதிகளைக் கட்டணமின்றி அல்லது சலுகை விலையில் பயன்படுத்துவதற்கு அமைச்சு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், நிதி ரீதியான நேரடி உதவியைத் தவிர்த்து, மற்ற வகைகளில் மாநில அரசுக்கான சுமைகளைக் குறைக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, மலேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையினால் (ADAMAS) மேற்கொள்ளப்படும் ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கான செலவுகளைக் குறைப்பது குறித்து சுக்மா உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இத்தகைய சலுகைகள் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி, சுக்மா போட்டிகளுக்கான செலவினங்களைச் சிலாங்கூர் அரசு பாதியாகக் குறைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

தொடக்கத்தில் 100 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டிருந்த இப்போட்டியின் செலவினம், தற்போது சிக்கன நடவடிக்கைகளின் காரணமாக 40 மில்லியன் முதல் 50 மில்லியன் ரிங்கிட்டிற்குள் அமையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.