ஹாமில்டன், மே 12: ஈரான் உடனான பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' (Project Freedom) திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், இம்முறை இத்திட்டம் வெறும் பாதுகாப்பு நடவடிக்கையாக மட்டும் இருக்காது என்றும், ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது அமையும் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பேசிய அதிபர் ட்ரம்ப், ஈரானின் கடும்போக்குத் தலைவர்கள் இறுதியில் அடிபணிய வேண்டிய சூழல் ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
அவர்கள் நிச்சயமாகப் பின்வாங்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஈரானியத் தலைமைத்துவத்துடன் ஒரு முறையான உடன்படிக்கை எட்டப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களில் உள்ள கதிரியக்கக் கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பம் அந்நாட்டிடம் இல்லை என்றும், அதனை அமெரிக்காவே கையாள வேண்டியிருக்கும் என்று ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையையும் மூடியது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் வழங்கிய சமீபத்திய பரிந்துரைகளை அதிபர் ட்ரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
ஈரானின் அந்தப் பதில் அறிக்கை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வர்ணித்துள்ள அவர், காலவரையற்ற போர்நிறுத்தத்தை மட்டும் நீட்டித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு பெரும் போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.








