ஜகார்த்தா, மே 10 — மவுண் டுகொனோ (Mount Dukono) எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து காணாமல் போன இரு சிங்கப்பூர் மலையேற்ற பயணிகளைத் தேடும் பணி, தொடர்ந்து இடம்பெறும் எரிமலை வெடிப்புகளும் மோசமான வானிலையும் காரணமாக இன்று மேலும் சிரமமடைந்துள்ளது.
அந்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.உள்ளூர் மீட்பு அமைப்பின் தலைவர் Iwan Ramdani கூறுகையில், இன்று காலை முதல் இரண்டு வெப்ப உணர்வு ட்ரோன்களுடன் சுமார் 150 மீட்பு பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கைகள் எரிமலையின் பள்ளத்தின் விளிம்பிலிருந்து சுமார் 100 முதல் 150 மீட்டர் சுற்றளவில் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“ஆனால், மவுண்ட் டுகோனோ தொடர்ந்து வெடித்து வருகிறது. அதோடு அந்த பகுதியில் மழையும் பெய்து வருகிறது. வெடிப்பு இல்லாத இடைவெளிகளில் மட்டுமே மீட்பு பணிகளை மேற்கொள்கிறோம்,” என்று அவர் Reuters-க்கு தெரிவித்தார்.
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள North Maluku மாகாணத்தில் அமைந்துள்ள Mount Dukono, வெள்ளிக்கிழமை (மே 8) முதல் வெடிக்கத் தொடங்கியது. அப்போது சுமார் 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் புகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரும் குறைந்த அளவில் வெடிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
பள்ளம் சுற்றிய பகுதி இன்னும் எரிமலை சாம்பலால் மூடப் பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் கடைசியாக காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.25 கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் நடைபெற்றுவருவதாகவும் இவான் ரம்தானி கூறினார்.
மீட்புக் குழுவினர், காணாமல் போன இரு சிங்கப்பூரர்களுக்கு சொந்தமானதாக நம்பப்படும் பைகளையும் கண்டு பிடித்துள்ளனர். காவல்துறை தலைவர் Erlichson Pasaribu கூறுகையில், உயிர் தப்பியவர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.
நேற்று, முன்பு காணாமல் போயிருந்த ஒரு இந்தோனேசிய மலையேற்ற பயணி உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தப் பட்டது. இந்த சம்பவத்தில் ஏழு சிங்கப்பூரர்களும் 10 இந்தோனேசியர்கள் உட்பட மொத்தம் 17 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
Ministry of Foreign Affairs Singapore வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் இன்று தாய் நாட்டிற்கு திரும்பவுள்ளனர். இந்தோனேசிய எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாவது, இன்று காலை குறைந்தது மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் மிகப் பெரியது 1.3 கிலோமீட்டர் உயரம் வரை எரிமலை சாம்பலை வெளியேற்றியது.
Mount Dukono-வுக்கான எச்சரிக்கை நிலை இன்னும் மூன்றாவது மிக உயர்ந்த நிலையில் தொடர்கிறது. மேலும், பள்ளத்தைச் சுற்றிய 4 கிலோமீட்டர் பரப்பளவில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.




