ஷா ஆலம், மே 8: மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, சிலாங்கூர் மாநிலத்தின் மாவட்டங்களான சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகியவை இந்த மோசமான வானிலை பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
மேலும், பேராக் மாநிலத்தின் மஞ்சோங், பேராக் தெங்கா, பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய இடங்களிலும், நெகிரி செம்பிலான் (போர்டிக்சன்), மலாக்கா மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் மாநிலத்தில் தங்காாக், மூவார், பத்து பஹாட் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கில் ஸ்ரீ அமான், பெத்தோங், சரிக்கே, சிபு, காபிட் மற்றும் பிந்துலு ஆகிய இடங்களிலும், சபாவில் கோலா பென்யு, தெலுபிட், பெலூரான், சண்டாக்கான், பித்தாஸ் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளிலும் மழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்திலும் இதேபோன்ற வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணிநேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் அறிகுறிகள் தென்படும்போது அல்லது அத்தகைய சூழல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நேரத்திலிருந்து ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் குறுகிய கால அறிவிப்புகளாகும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







