ஷா ஆலம், மே 6: ஜோகூர், பரிட் சுலோங்கில் உள்ள ஸ்ரீ மைமோன் தேசியப் பள்ளி மாணவி நூர் ஐனி உமைரா விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட 60 வயது வேன் ஓட்டுநருக்கு மூன்று நாட்கள் காவல்துறை தடுப்புக்காவல் (Remand) விதிக்கப்பட்டுள்ளது.
பத்து பகாட் நீதிமன்றத்தில் இன்று காலை மாஜிஸ்திரேட் நூராசிடா ஏ ரஹ்மான் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விபத்து குறித்து மேல் விசாரணைகளை மேற்கொள்ள ஏதுவாக, சந்தேக நபரை இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்குக் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, இன்று காலை 8 மணியளவில் பத்து பகாட் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அந்த முதியவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தத் தடுப்புக்காவல் நடைமுறைகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில், எட்டு வயது சிறுமி நூர் ஐனி உமைரா பள்ளியின் பிரதான நுழைவாயில் அருகே வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனது செல்ல மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதற்காகத் தாய் அஸ்மிலா துக்கிரான் வந்து சேர்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகவே இந்த அகால மரணம் நிகழ்ந்தது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
உயிரிழந்த சிறுமியின் உடல், நேற்று இரவு 8.35 மணியளவில் பரிட் சுலோங் அருகே உள்ள கம்போங் பரிட் முஸ்தபா இஸ்லாமிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.








