சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஐந்தாண்டு செயல் திட்டம் அறிமுகம் – ஷா ஆலம் மாநகராட்சி

6 மே 2026, 6:29 AM
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஐந்தாண்டு செயல் திட்டம் அறிமுகம் – ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், மே 6: ஷா ஆலம் மாநகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை நீட்டிக்கச் செய்யவும், அதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 'ஷா ஆலம் சுற்றுலா செயல் திட்டம் 2026-2030' (Shah Alam Tourism Action Plan 2026-2030) எனும் விரிவான திட்டத்தை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) வடிவமைத்து வருகிறது.

இது குறித்து ஷா ஆலம் மேயர் டத்தோ சபிடா சாஃபர் கூறுகையில், ஷா ஆலம் நகரில் ஏராளமான ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலங்கள் இருந்தபோதிலும், முறையான மற்றும் ஒருங்கிணைந்த 'சுற்றுலாத் தொகுப்புகள்' (Tourism Packages) இல்லாததே பெரிய குறையாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

"பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் ஷா ஆலமில் தங்குகிறார்கள், ஆனால் அவர்கள் ஷோப்பிங் செய்வதற்காகவோ அல்லது பொழுதைக் கழிப்பதற்காகவோ கோலாலம்பூர் அல்லது சுபாங் ஜெயா போன்ற அண்டை நகரங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள்" என அவர் 'தி ஸ்டார்' ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்த நிலையை மாற்றியமைக்க, சுற்றுலாப் பயணிகள் ஷா ஆலாமில் குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு இரவுகள் தங்கி நேரத்தைச் செலவிடுவதை மாநகராட்சி இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பணப்புழக்கம் மாநகராட்சி எல்லைக்குள்ளேயே சுழன்று, உள்ளூர் வணிகர்களுக்குப் பெரும் பயனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலக்கை அடைய, டூரிசம் சிலாங்கூர் (Tourism Selangor) மற்றும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் (MOTAC) ஒத்துழைப்புடன் மாநகராட்சி செயல்படவுள்ளது.

மேலும், தேசிய தாவரவியல் பூங்கா (Taman Botani Negara), ஐ-சிட்டி (i-City) மற்றும் ஷா ஆலம் ஏரிப் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களின் உரிமையாளர்களுடனும் இணைந்து புதிய சுற்றுலாத் தொகுப்புகள் உருவாக்கப்படும். இந்த ஒருங்கிணைப்புப் பணிகளை ஷா ஆலம் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுத் துறை முன்னின்று நடத்தும்.

இவற்றுடன், ஷா ஆலமில் உள்ள பிரபலமான உணவகங்கள் மற்றும் வைரலாகப் பேசப்படும் இடங்களைக் கண்டறியப் பிரத்யேக சுற்றுலா இணையப்பக்கம் (Portal) ஒன்று ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதாக மேயர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு நிறுத்தத் தகவல் மையமாகச் செயல்படும் இந்தத் தளம், எதிர்காலத்தில் கைப்பேசி செயலியாக (Mobile App) மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.