ஷா ஆலம், மே 6: போர்ட் டிக்சன் கடற்பகுதியில் நேற்று அதிகாலை சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஒரு படகு ஒட்டுநர் உட்பட 15 இந்தோனேசியக் குடியேறிகளை மலேசியக் கடல்சார் அமலாக்க முகமையினர் (Maritim Malaysia) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை சுமார் 3.40 மணியளவில், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் பிரிவினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாந்தாய் சஹாயா நெகிரிக்கு (Pantai Cahaya Negeri) தென்மேற்கே சுமார் 0.5 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றுகொண்டிருந்த பதிவு எண் இல்லாத அதிவேகப் படகு ஒன்றை அதிகாரிகள் வழிமறித்தனர்.
மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் இயக்குநர், கேப்டன் சலேஹுடின் ஜக்காரியா இது குறித்து விடுத்த அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத கடல் வழிகள் வழியாகக் குடியேறிகள் நாட்டிற்குள் வருவதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தப் படகில் சோதனையிட்டபோது, 20 முதல் 46 வயதிற்குட்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
முறையான பயண ஆவணங்கள் ஏதுமின்றி நாட்டிற்குள் நுழைய முயன்ற அவர்களைக் கைது செய்த அதிகாரிகள், அந்தப் படகில் விரிவான சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது, பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் 'கோல்ட்' (Colt) ரகக் கைத்துப்பாக்கி ஒன்றும், ஐந்து உயிருள்ள தோட்டாக்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டப் பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து குடிவரவுச் சட்டம் 1959/63, மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் (ATIPSOM) 2007 மற்றும் ஆயுதச் சட்டம் 1971 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடலில் நடக்கும் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் அல்லது அவசரச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் 999 என்ற அவசர எண்கள் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அதுமட்டுமில்லாமல், 06-3876730 என்ற எண்கள் வழியாகவும் கடல்சார் செயல்பாட்டு மையத்தையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.








