பொது வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமித்த உணவகம் மீது நடவடிக்கை - சுபாங் ஜெயா மாநகராட்சி

6 மே 2026, 1:44 AM
பொது வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமித்த உணவகம் மீது நடவடிக்கை - சுபாங் ஜெயா மாநகராட்சி
பொது வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமித்த உணவகம் மீது நடவடிக்கை - சுபாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், மே 6: சுபாங் ஜெயா, ஜாலான் SS 18 பகுதியில் உள்ள பொது வாகன நிறுத்துமிடங்களை (Parking) தனது சொந்தத் தேவைகளுக்காகச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த உணவகத்தின் மீது சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஎஸ்ஜே) அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாக வாகன நிறுத்துமிடங்களை ‘சோப்’ (Cop) செய்யும் போக்கைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் பொது வாகன நிறுத்துமிடங்களில் நாற்காலிகள், மேசைகள் மற்றும் எண்கள் இடப்பட்ட கூம்புகளை (Cones) வைத்து மற்ற வாகனங்கள் நிறுத்த முடியாதபடி தடுத்தது கண்டறியப்பட்டது.

மாநகராட்சி விடுத்த அறிக்கையின்படி, அந்த இடத்திலிருந்த அனைத்துப் பொருட்களும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ஜாலான் TP 2, யுஇபி தொழில் பூங்காவில் உள்ள மாநகராட்சி கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டன.

பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன் மட்டுமல்லாமல், விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட அந்த உணவக உரிமையாளருக்கு அபராத நோட்டீஸும் (NTK) வழங்கப்பட்டுள்ளது.

வணிக உரிமையாளர்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதிப்படுத்தவும், இது போன்ற விதிமீறல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் இந்த எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்பிஎஸ்ஜே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, வணிக வளாகங்கள் உரிம நிபந்தனைகளையும் சிறு சட்டங்களையும் (By-laws) முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுபாங் ஜெயா மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.