மருந்து விநியோகத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கத் தயார் நிலை: சுகாதார அமைச்சு புதிய சிறப்பு பணிக்குழுவை அமைத்தது

5 மே 2026, 10:00 AM
மருந்து விநியோகத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கத் தயார் நிலை: சுகாதார அமைச்சு புதிய சிறப்பு பணிக்குழுவை அமைத்தது

கோலாலம்பூர், மே 5: உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் வகையில், 'மருந்து மற்றும் மருத்துவ உபகரணப் பாதுகாப்புக்கான சிறப்பு பணிக்குழுவை' (Special Task Force on Drug and Medical Device Safety) சுகாதார அமைச்சு அமைத்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீடாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள கச்சாப் பொருள் தட்டுப்பாடு, எரிசக்தி நெருக்கடி மற்றும் சர்வதேச அளவில் உயர்ந்து வரும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற சவால்களைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் பணிக்குழுவானது தற்போதைய நிலவரங்களை உடனுக்குடன் கண்காணிப்பதோடு, உள்நாட்டில் மருந்து விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய உலகச் சந்தையிலிருந்து மருந்துகளைக் கொள்முதல் செய்யும் ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி வருகிறது.

இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், குறிப்பாக மிக முக்கியமானதாகக் கருதப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் கையிருப்பு எப்போதும் 60 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வகையில் வலுவாக இருப்பதை அமைச்சு உறுதி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உள்நாட்டில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை நிலைநிறுத்துவதில் 'மடாணி' அரசாங்கம் உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.

மருந்து விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளை முன்கூட்டியே கண்டறியும் எச்சரிக்கை அமைப்பை அமைச்சு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், விநியோகிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய விநியோகச் சிக்கல்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பே, அதாவது எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தைப் பொறுத்தவரை, சீன அதிகாரிகளுடன் மருத்துவ சாதனங்கள் ஆணையம் (MDA) ஒரு மூலோபாய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 'ரெசின்' மற்றும் 'நாப்தா' போன்ற முக்கியமான உற்பத்தி மூலப்பொருட்களின் விநியோகம் உறுதி செய்யப்படுவதால், மலேசியாவின் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எவ்விதத் தடங்கலும் இன்றி இயங்க முடியும்.

அதோடு, அவசரத் தேவைக்கான மருத்துவ உபகரணங்களை விரைவாக நாட்டுக்குள் கொண்டு வர சிறப்பு அனுமதி வழித்தடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சைக்கூடங்கள் மற்றும் இதர சிகிச்சைப் பிரிவுகள் எவ்விதப் பாதிப்புமின்றிச் செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் உறுதியளித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.