பொறுப்புணர்வை வலுப்படுத்த, அதிகாரப்பூர்வப் புகார் தளத்தை மீடியா சிலாங்கூர் அறிமுகம் செய்துள்ளது

5 மே 2026, 3:05 AM
பொறுப்புணர்வை வலுப்படுத்த, அதிகாரப்பூர்வப் புகார் தளத்தை மீடியா சிலாங்கூர் அறிமுகம் செய்துள்ளது

ஷா ஆலம், மே 5: மீடியா சிலாங்கூர் அதன் வெளியீட்டு உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்களையும் கருத்துக்களையும் பொதுமக்கள் சமர்ப்பிக்க அதிகாரப்பூர்வ இணையவழி புகார் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தளத்தை
https://mediaselangor.com/ms/aduan என்ற இணைய முகவரியில் நாடலாம். இது மலாய், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் உள்ள மீடியா சிலாங்கூரின் அனைத்து வெளியீட்டுத் தளங்களையும் உள்ளடக்கியது.

மலேசிய ஊடக மன்றச் சட்டம் 2025 (சட்டம் 868) பிரிவு IV மற்றும் மன்றத்தின் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு புகாரும் முறையான, வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் கையாளப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

மீடியா சிலாங்கூர் கருத்துப்படி, பெறப்படும் ஒவ்வொரு புகாரும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, உள் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

"பொதுமக்கள் தங்கள் புகார்களை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிப்பதை எளிதாக்க இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கருத்தும் பதிவு செய்யப்பட்டு, தொழில்முறையில் கையாளப்படுவதை உறுதி செய்கிறோம்" என்று அந்நிறுவனம்
அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்தத் தளத்தின் மூலம், புகார்தாரர்கள் தங்களது பெயர், அடையாள அட்டை எண், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கட்டுரையின் நகல், திரைப்பிடிப்பு (screenshot), இணைய இணைப்பு (URL) மற்றும் வெளியீட்டுத் தேதி போன்ற புகார் செய்யப்படும் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களையும் புகார்தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், மதிப்பீட்டு செயல்முறைக்கு உதவ, ஊடக நிறுவனத்தின் பெயர் மற்றும் தொடர்புடைய கடிதப் பரிமாற்றங்கள் போன்ற தகவல்களையும், ஏதேனும் இருந்தால், சேர்க்கலாம்.

புகார்தாரர்கள் தாங்கள் அனுபவித்த தனிப்பட்ட பாதிப்புகளை விளக்குமாறும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புகாரை வலுப்படுத்த கூடுதல் தகவல்கள் அல்லது பிற துணை ஆவணங்களைச் சேர்க்க மீடியா சிலாங்கூர் புகார்தாரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

"தரமான, நம்பகமான மற்றும் நேர்மையான ஊடக சேவையை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த வழிமுறை அவ்வப்போது வலுப்படுத்தப்படும்," என்று அது கூறியது.

அதேவேளையில், இந்த புகார் வழிமுறையை உருவாக்கும் பணியில் வழங்கப்பட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக மலேசிய ஊடக மன்றத்திற்கு மீடியா சிலாங்கூர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.