ஷா ஆலம். மே 4 - சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் பதட்டங்களைத் தவிர்ப்பதற்கு, நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அறிக்கைகளை வெளியிடுவதில் அதிகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மனிதவள மற்றும் ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு நினைவுறுத்தினார்.
ஜனநாயக அமைப்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்றாலும், அது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் அளவுக்கு எல்லை மீறக்கூடாது என்று அவர் கூறினார்.
சொங்க்ரான் கொண்டாட்டம் மற்றும் தண்ணீர் திருவிழா போன்ற நிகழ்வுகளை, பன்முக கலாச்சாரத்தின் பின்னணியிலும், ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
"கெடா போன்ற பிற மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்போது, அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறுவதில்லை. ஆனால், கூட்டரசு மட்டத்தில் செயல்படுத்தப்படும்போது, அது கேள்விக்குள்ளாக்கப்பட்டு அளவுக்கு அதிகமாக அரசியலாக்கப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை. காவல்துறை மற்றும் பிற அரசுத் துறைகள் உட்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பணிகளைத் தடையின்றி தொழில்முறையில் செய்ய அனுமதிக்க வேண்டும்," என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
குறிப்பாக இன ஒற்றுமை தொடர்பான, நன்மை பயக்காத சர்ச்சைகளை உருவாக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல இன சமூகங்களிடையே தவறான புரிதல்களையும், நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் அறிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும்.
"மலேசியா பல இனம் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு பண்டிகையும், கலாச்சாரப் பழக்கவழக்கங்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் மதிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்," என்றார் அவர்.
எனவே, தேவையற்ற சர்ச்சைகளை நிறுத்தி, பிரிவினையை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.








