அரசாங்கம் அறிவித்துள்ள மகப்பேறு விடுப்புக்கு பிந்தைய உதவித்தொகைக்கு பெரிய வரவேற்பு

3 மே 2026, 3:39 AM
அரசாங்கம் அறிவித்துள்ள மகப்பேறு விடுப்புக்கு பிந்தைய உதவித்தொகைக்கு பெரிய வரவேற்பு

கோலாலம்பூர், மே 3: அரசாங்கம் அறிவித்துள்ள மகப்பேறு விடுப்புக்கு பிந்தைய உதவித் தொகை (EPCB), பணிபுரியும் தாய்மார்களின் நலனைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் ஒரு வலுவான தொழிலாளர் படையை உருவாக்க அடித்தளமாகவும் அமைகிறது என்று மனிதவளத் (HR) நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனிதவளத் தீர்வுகள் துறையில் 20 வருட அனுபவம் கொண்ட கூ சிம் லிங், இந்த உதவித்தொகைக்கான செலவை சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (PERKESO) ஏற்பதால், முதலாளிகள் இந்த முயற்சியை ஆதரிக்க முன் வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"முதல் முறையாகத் தாயாகும் பல ஊழியர்கள், தங்களின் பிறந்த குழந்தையை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும் என்ற கவலையில், சம்பளமில்லா விடுப்பு எடுக்கத்தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகளை நான் தனிப்பட்ட முறையில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

"எனவே, இந்த உதவித்தொகை மூலம் அவர்களின் நிதிச்சுமை குறைவதால், சம்பளமில்லா விடுப்பு எடுக்கும் அவர்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியை அளிக்கிறது," என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

பணிபுரியும் தாய்மார்களின் பிரச்சனை செலவு தொடர்பானது மட்டுமல்ல, அது வேலை சிரமங்கள், தொடர்ச்சி மற்றும் ஆழ்மன சார்புநிலை போன்ற காரணிகளையும் உள்ளடக்கியது என்பதால், இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களை வேலைக்கு அமர்த்துவதிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் முதலாளிகள் இனிமேல் அதிக திறந்த மனதுடன் இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"மனநிலை மாற்றம் ஒரே இரவில் ஏற்படாது. நல்ல கொள்கைகள் நிதிச்சுமையைக் குறைத்தாலும், அது தானாகவே சார்பு நிலையை அகற்றாது," என்றார் அவர்.

இந்த முயற்சி சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பரவலாகச் செயல் படுத்தப்படுவதை உறுதி செய்ய, முதலாளிகளுக்கு, குறிப்பாக நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PKS) கல்வி கற்பிக்கும் அடிப்படை முயற்சிகளில் பெர்கேசோ மிகவும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கிம் பரிந்துரைத்தார்.

"இத்தகைய முயற்சிகள் பொதுவாக நீண்டகால நேர்மறையான விளைவுகளைத் தரும். ஏனெனில், தொழிலாளர் படையில் நீடிக்கும் தாய்மார்கள், வரி மூலம் தொடர்ந்து பங்களிப்பார்கள். அதே நேரத்தில், நாட்டின் எதிர்கால தொழிலாளர் தலைமுறையாக உருவாகும் தங்கள் குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

2026-ஆம் ஆண்டு தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பெண்களின் பங்களிப்பை ஆதரிப்பதற்கும், பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒரு முற்போக்கான நடவடிக்கையாக இந்த மகப்பேற்று விடுப்புக்குப் பிந்தைய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.

குறிப்பாக 25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், மகப்பேறு கடமைகள் காரணமாகச் சற்று குறைந்துள்ளதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி அறிமுகப் படுத்தப்பட்டதாக அன்வார் கூறினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.