கிள்ளான் செந்தோசா மே 3; கிள்ளான் செந்தோசா சட்டமன்றத் தொகுதியினர், இவ்வாண்டு சித்திரை புத்தாண்டை இந்தியக் கலாச்சாரம் மற்றும் தேச ஒற்றுமையைப் போற்றும் புதுமை விழாவாக கொண்டாடவுள்ளனர்.

எதிர்வரும் மே 10 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்குத் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில், சித்திரை புத்தாண்டை இந்திய கலாச்சாரப் பண்பாடு மற்றும் ஒற்றுமை திருவிழாவாக மட்டுமின்றி வேறு பல அம்சங்களையும் சேர்த்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருவதாகச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப் படுத்துவது, இளைஞர், குழந்தை மற்றும் மகளிர் கல்வி, பொருளாதார, சமூகக் குடும்ப மேம்பாடுகளைப் போற்றுவது மட்டுமின்றி உடல் ஆரோக்கிய நிகழ்வுகளுடன், அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் தொகுதி வாழும் பொது மக்கள் அறிந்து கொள்ள இந்த ஒன்றுகூடல் சிறந்த வாய்ப்பு வழங்குவதாக அவர் கூறினார்.
மே 10 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 00 மணி வரை நடைபெறும் நிகழ்வுக்கு சுமார் 2000 வருகையாளர்களை எதிர் பார்க்கிறோம். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களும் வருகை புரியவுள்ளார் என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவில் முக்கிய நோக்கமாக நமது பாரம்பரியம், கலை கலாச்சாரம் உணவு, இசை, தொழில், வளர்ச்சியை இன்றைய தலைமுறையினரிடம் அறிமுகப் படுத்துவதும் ஊக்குவிப்பதும் ஆகும். அவற்றில் சிலவற்றை அரசு உதவியுடன் கூட்டாக மேம்படுத்து-வதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கும் இது போன்ற பிரம்மாண்டமான ஒன்று கூடல்கள் அவசியம் என்றார் அவர்.
அத்துடன் தொகுதியில் பல்வேறு துறைகளில் உள்ள தனித் திறமை மற்றும் சிறப்புமிக்க-வர்களை அறிமுகப்படுத்திச் சிறப்பிப்பது, குறிப்பாக உயர்கல்வி மாணவர்களுக்கு, கல்வி வழிகாட்டல் உரையாடல்கள் நடத்துவதும் அவற்றில் அடங்கும் என அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் விருந்துபசரிப்புடன், வருகையாளர்களை ஊக்குவிக்க மோட்டார் சைக்கிள் , தொலைக்காட்சிப் பெட்டி உட்படப் பல தரமான பரிசுகளுடன் அதிர்ஷ்டக் குலுக்கும் இடம் பெறும்.
அதே வேளையில் சில வசதியற்ற பிள்ளைகளின் பள்ளி போக்குவரத்து கட்டணங்களை ஏற்கும் வண்ணம், சட்டமன்றத் தொகுதி உடன் இணைந்து சில நன்கொடையாளர்கள் ஏற்படுத்த உள்ள ஒரு உதவி நிதித்திட்டமும் தோற்றுவிக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக இது ஒரு சமுதாய விழிப்புணர்வு மற்றும் உதவித் திட்டங்களின் தொகுப்பு. இங்கு வருகையாளர்கள் பயனடைவதையும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதன் உன்னதத்தையும் ஒற்றுமையைப் பலப்படுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்வு என்பதால் அனைவரும் திரண்டு வந்து பங்கெடுத்துக் கொள்ள அழைக்கிறார் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ்





