ஷா ஆலாம், மே 2: குளோபல் சுமுட் புளோட்டிலா (ஜி.எஸ்.எப்) 2.0 மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேலிய ஆட்சியாளர்களால் கடத்தப்பட்ட 10 மலேசியர்களும் விடுவிக்கப்பட்டு, தற்போது கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் உள்ள லெராபெட்ரா துறைமுகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமுட் நுசாந்தரா கட்டளை மையத்தின் (எஸ்.என்.சி.சி) தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் ஆலிம் அராபி கூறுகையில், அந்த 175 ஆர்வலர்களும் அந்தந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளுக்காக, கிரீஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் ஹெராக்லியன் விமான நிலையத்திற்கு மாற்றப் பட்டதாகத் தெரிவித்தார்.
"அனைத்து ஆர்வலர்களும் ஹெராக்லியன் விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் பணிகள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன," என்று பாயிங்கில் இன்று நடைபெற்ற குளோபல் சுமுட் புளோட்டிலா 2026 இயக்கத்தின் சமீபத்திய நிலவரம் குறித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், துருக்கி அரசாங்கம் தனது 20 குடிமக்களை அழைத்து வருவதற்காக 160 இருக்கைகள் கொண்ட விமானத்தை வழங்கியுள்ளதாகவும், மற்ற ஆர்வலர்களுக்கும் அதில் இடம் வழங்க முன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
"அந்த விமானம் மலேசிய நேரம் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மலேசிய நேரம் இரவு 11.45 மணிக்கு இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.
கைது செய்யப்பட்டிருந்த காலத்தில், ஆர்வலர்கள் ஆத்திரமூட்டும் செயல்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் உட்பட முறையற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், இதனால் பல பங்கேற்பாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
"கைது செய்யப்பட்டிருந்த போது ஆர்வலர்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக எங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளது," என்றார்.
இருப்பினும், சயீப் அபுகேஷேக் மற்றும் தியாகோ அவிலா ஆகிய இரண்டு சர்வதேச ஆர்வலர்கள் இன்னும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களால் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மலேசியர்களின் தாயகம் திரும்பும் பயணத்தை ஒருங்கிணைக்க எஸ்.என்.சி.சி தற்போது வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், களப்பணிகளுக்காக அதன் மூன்று பிரதிநிதிகள் இஸ்தான்புல்லில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"மலேசிய ஆர்வலர்கள் 10 பேரும் இந்த மனிதாபிமானப் பணியைத் தொடர்வதா அல்லது நாடு திரும்புவதா என்பது அவர்களின் உடல்நலம் மற்றும் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்," என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களையும் உடனடியாக விடு விப்பதை உறுதி செய்ய, சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் எஸ்.என்.சி.சி கேட்டுக் கொண்டது.
நேற்று கடத்தப்பட்ட 10 மலேசியர்கள்: ஜைனல் ரஷித் அஹ்மத் (ஆர்க்காம் III), ஒஸ்மான் சோல்கிப்லி மற்றும் டாக்டர் ஜிஹான் ஆல்யா முகமட் நோர்டின் (ஈரோஸ் 1), ஹஸ்வான் ஹசிம் டெர்மாவான், முகமட் ஹனாபி முகமட் சலீம், அஹ்மத் மூசா அல்-நுவைரி கமாருசாமான் மற்றும் நூர்ஹெல்மி அப் கனி (பியான்கா பி.சி.என்).
இவர்களுடன், முகமட் ரெட்சால் அம்சா (ஃபிரேயா), முஹமத் முஹ்சின் ஜைதி (மாரியா) மற்றும் முகமட் ஷம்சீர் முகமட் ஈசா (எஸ்ல்பாய்) ஆகியோரும் அடங்குவர்.
ஜி.எஸ்.எப் 2.0 இயக்கம், காசாவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், அதன் மீதான முற்றுகையை உடைக்க உறுதிபூண்டுள்ள ஒரு சர்வதேச கடல்சார் கூட்டணி மற்றும் உலகளாவிய அணிதிரட்டல் இயக்கமாகும்.
இஸ்ரேலால் கடத்தப்பட்ட 10 மலேசியர்களும் விடுதலை செய்யப் பட்டதாக எஸ்.என்.சி.சி உறுதி செய்துள்ளது
2 மே 2026, 5:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




