மனிதாபிமானப் பணியின் போது இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட 10 மலேசியர்களை விடுவிக்க   அரசாங்கம்   முயற்சி

2 மே 2026, 2:19 AM
மனிதாபிமானப் பணியின் போது இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட 10 மலேசியர்களை விடுவிக்க   அரசாங்கம்   முயற்சி

ஷா ஆலம்: குளோபல் சுமுட் புளோட்டிலா (GSF) 2.0 மனிதாபிமானப் பணியின் போது இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட 10 மலேசியர்களை விடுவிப்பதற்காக, நட்பு நாடுகளுடனான தூதரக வழிமுறைகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது.

வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் உள்ள தனது சக தலைவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை விடுவிப்பதற்கான வழிகளைக் கண்டறிய அனைத்து தூதரக வாய்ப்புகளையும் பயன்படுத்தப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"இஸ்ரேலியப் படைகளின் பிடியிலிருந்து அந்த 10 மலேசியர்களையும் விடுவிப்பதற்கான வழிகளைக் கண்டறிய, வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் உள்ள நமது நண்பர்களைத் தொடர்பு கொண்டு அனைத்து முயற்சிகளையும் நாங்கள் இப்போது எடுத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

"நான் வெளியுறவு அமைச்சகத்தையும், என்னால் தொடர்பு கொள்ளக்கூடிய பிற நட்பு நாடுகளையும் தொடர்பு கொள்கிறேன், என் அவர் இன்று ரவாங்கில் உள்ள நூர் அல்-ஈமான் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே வேளையில், அனைத்துலகக் கடற்பரப்பில் மனிதாபிமானப் பணியில் ஈடு பட்டவர்களைக் கைது செய்த இஸ்ரேலின் நடவடிக்கையை அவர் கடுமையாகக் கண்டித்தார். இது அத்துமீறிய செயல் என்றும் சட்ட விதிகளை மதிக்காத செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"முதலாவதாக, மலேசியர்கள் மட்டுமல்லாது, இஸ்ரேலிய சியோனிச ஆட்சியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் அனைத்துலகக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது கொள்கைகளைச் சிறிதும் மதிக்காத ஒரு பைத்தியக்காரத்தனமான செயல்."

"இரண்டாவதாக, உயிர் தப்பியவர்கள் கிரீஸ் நாட்டின் கடல் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர்களுக்கு கிரேக்க அரசாங்கமும் கடற்படையும் பாதுகாப்பு அளித்தன. இது இஸ்ரேலியப் பகுதியை மீறிய செயல் அல்ல, ஏனெனில் அவர்கள் இன்னும் அனைத்துலகக் கடற்பரப்பில்தான் இருந்தனர்."

"இப்படியாக அட்டூழியங்கள் தொடர்கின்றன. பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதில் அவர்கள் (இஸ்ரேல்) திருப்தி அடையவில்லை. ஈரான், லெபனான், காசா மீது தாக்குதல் நடத்தியதில் திருப்தி அடையவில்லை. இப்போது ஆயுதங்களை ஏந்திச் செல்லாமல், உணவு, பானங்கள், மருந்துகள் மற்றும் ஆடைகள் போன்ற சில உபகரணங்களை மட்டுமே கொண்டு சென்று உதவ நினைப்பவர்களையும் விட்டு வைக்கவில்லை," என்றார்.

இந்த மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு மலேசியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கைது செய்யப்பட்டு 30 மணி நேரத்திற்கும் மேலாகியும், சம்பந்தப்பட்ட 10 மலேசியர்களின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. நேற்று அனைத்துலகக் கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினரால் தடுத்து வைக்கப்பட்ட மற்ற 186 ஆர்வலர்கள் குறித்த எந்தப் புதிய தகவலும் இல்லை.

அவர்கள் அனைவரும் இந்த பயணத்தில் ஐந்து வெவ்வேறு கப்பல்களில் இருந்ததாக நம்பப்படுகிறது. ZRA  ஸ்ட்ரீம் நிறுவனர் ஜைனல் ரஷீத் அஹ்மத் 'அர்காம் III' கப்பலில் இருந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில் 'பியான்கா பிசிஎன்' கப்பலில் இருந்த முகமட் ஹனாபி முகமட் சலீம், அஹ்மத் மூசா அல்-நுவைரி கமாருசமான், நார்ஹெல்மி அப் கனி மற்றும் ஹஸ்வான் ஹசிம் டெர்மவான் ஆகியோரும் உள்ளனர்.

மேலும், 'ஈரோஸ் 1' கப்பலில் இருந்த ஒஸ்மான் சூல்கிப்லி மற்றும் டாக்டர் ஜிஹான் ஆல்யா முகமட் நோர்டின், 'எஸ்லாப் II' கப்பலில் இருந்த முகமட் ஷம்சிர் முகமட் ஈசா, 'ஃப்ரியா' கப்பலில் இருந்த முகமட் ரெட்சால் அம்சா மற்றும் 'மரியா' கப்பலில் இருந்த முஹமட் முஷின் ஜைடி ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

GSF மனிதாபிமானப் பணியின் 18வது நாளில், தொடர்பு துண்டிக்கப்பட்ட 186 பங்கேற்பாளர்களில் 10 மலேசியர்களும் அடங்குவர் என்று சுமுட் நுசாந்தரா நடவடிக்கை மையம் (SNCC) நேற்று உறுதிப்படுத்தியது.

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவுகளுக்கு அருகிலுள்ள மத்திய தரைக்கடல் கடற்பரப்பில், இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த இயக்கத்தின் மொத்த 63 கப்பல்களில் 22 கப்பல்களை வழிமறித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.