ஷா ஆலாம், மே 1: சிலாங்கூரில் பல இடங்களில் குடி நுழைவுத் துறை நடத்திய அதிரடி நடவடிக்கைகளில், சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களை (PATI) வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக மூன்று உள்ளூர் முதலாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பெட்டாலிங் ஜெயா, தெலுக் பாங்லிமா காராங் மற்றும் பத்துமலை ஆகிய பகுதிகளில் இந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. கைது செய்யப்பட்ட மூன்று வளாக உரிமையாளர்களும் 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 55E-இன் கீழ் குற்றம் புரிந்துள்ளது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், அவர்களை வேலைக்கு அமர்த்துதல் அல்லது தங்கள் வளாகங்களில் தங்க அனுமதித்தல் போன்ற குற்றங்கள் இதில் அடங்கும்.
"கைது செய்யப்பட்ட முதலாளிகளில், கோத்தா டாமான்சாரா பிரிவு 4-இல் உள்ள உணவக உரிமையாளருக்கு RM10,000 அபராதமும், பண்டார் ரிம்பாயுவில் உள்ள உணவக உரிமையாளருக்கு RM16,000 அபராதமும், மேடான் சிலாயாங்கிலுள்ள சுகாதார சிகிச்சை மைய உரிமையாளருக்கு RM12,000 அபராதமும் விதிக்கப்பட்டது," என்று பேஸ்புக் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் செமினியாவில் உள்ள சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களு-க்கான சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. தொடர்புடைய சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க, சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையோ அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்துவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நினைவூட்ட பட்டுள்ளது.




