ஷா ஆலம், மே 1: 2026ஆம் ஆண்டுக்கான ராஜா மூடா சிலாங்கூர் கிண்ணம் மற்றும் டத்தோ மொக்தார் டஹாரி கிண்ணம் ஆகிய காற்பந்துப் போட்டிகளில் மொத்தம் 96 பள்ளிகள் வெற்றிக் கிண்ணத்திற்காகப் போட்டியிடவுள்ளன.
இம்மாதம் தொடங்கும் இப்போட்டியில், டத்தோ மொக்தார் டஹாரி கிண்ணப் போட்டிக்கு 18 வயதுக்குட்பட்ட (B-18) மற்றும் 15 வயதுக்குட் பட்ட (B-15) பிரிவுகளிலும், ராஜா மூடா சிலாங்கூர் கிண்ணப் போட்டிக்கு 12 வயதுக்கு உட்பட்ட (B-12) பிரிவிலும் தலா 32 குழுக்கள் பங்கேற்கின்றன.
போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோ இம்ரான் காடிர், இம்முறை 15 வயதுக்குட் பட்டோருக்கான பிரிவில் ஒரு சிறப்பு அம்சம் இடம் பெற்றுள்ளதாகக் கூறினார்."சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள், தமது 25 ஆவது வெள்ளி விழா ஆட்சிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 15 வயதுக்குட்பட்டோருக்கான காற்பந்துப் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
"எனவே, இது குறித்து மாநிலக் கல்வி இயக்குநருடன் இணைந்து விரைவில் மாண்புமிகு சுல்தானைச் சந்தித்து அவரது ஒப்புதலைப் பெற விருக்கிறேன்," என்று அவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜா மூடா சிலாங்கூர் கிண்ணம் மற்றும் டத்தோ மொக்தார் டஹாரி 2026 ஆம் ஆண்டுக்கான காற்பந்துப் போட்டிக்கான நன்கொடை வழங்கும் நிகழ்விற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.மேலும், இப் போட்டி இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களை உயர்மட்டத்திற்கு மெருகூட்டுவதற்கான ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பல வீரர்கள் சிலாங்கூரில் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள குழுக்களுக்காக விளையாடி வருவதன் மூலம், தரமானவீரர்களை உருவாக்கும் ஒரு முக்கிய தளமாக இப் போட்டி திகழ்கிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.
"வழக்கமாக, 18 மற்றும் 15 வயதுக்குட்பட்டோரு- க்கான இறுதிப் போட்டிகளின் போது, குறிப்பிட்ட குழுக்களின் பிரதிநிதிகள் வந்து கண்காணிப் பார்கள். திறமை வாய்ந்த வீரர்களைத் தங்கள் கழகங்களில் சேர்ப்பதற்காக அவர்கள் கவனிப்பார்கள்," என்றார் அவர்.
இம்முறை போட்டிக்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளதுடன், சுமார் RM400,000 நன்கொடையும் கிடைத்துள்ளது. இதில் 'கும்புலான் பெரங்சாங் சிலாங்கூர் பெர்ஹாட்' மற்றும் 'பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட்' ஆகியவை முதன்மையான ஆதரவாளர்களாக உள்ளன.
இது தவிர, ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA), சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) போன்ற பல உள்ளூராட்சி மன்றங்களும் ஆதரவாளர்களாக இணைந்துள்ளன.




