கோலாலம்பூர், மே 1: புக்கிட் ஜாலில், யூனிஃபை அரங்கத்தில் இன்று நடைபெறும் தேசிய அளவிலான 2026 தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து 15,000-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நிகழ்வு, நாட்டின் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பைப் பாராட்டும் ஒரு தளமாகவும், வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு மூலம் தொழில் சூழலை வலுப்படுத்தும் நோக்கிலும் அமைகிறது.
‘மடாணி தொழிலாளர்கள் தேசத்தின் மலர்கள்’ (Pekerja MADANI Kesuma Bangsa) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து, தொழிலாளர்களுக்கு சிறப்புரை ஆற்றுவார்.
அதைத் தொடர்ந்து, சிறந்த தொழிலாளர், சிறந்த முதலாளி, தொழிற்சங்கம், ஊடகம் மற்றும் சிறந்த அணி வகுப்புக் குழு உள்ளிட்ட 14 பிரிவுகளுக்கான 2026-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தின விருதுகளையும் அவர் வழங்குவார். ஒவ்வொரு வெற்றியாளரும் RM 10,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பட்டயத்தைப் பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அவர்களும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு, தொழிலாளர் தினக் கானிவல் 2026 இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 30,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கானிவல், தொழில் தொடங்குவோர், தற்போது பணியில் உள்ளவர்கள், திறன் மேம்பாடு மூலம் தொழில் முன்னேற்றம் காண்பவர்கள் மற்றும் பல்வேறு ஆதரவு சேவைகள் மூலம் மக்களின் நலனைப் பேணுவது என முழுமையான தொழில் சூழலின் தேவைகளில் கவனம் செலுத்துகிறது.
சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) ஏற்பாடு செய்துள்ள வேலை வாய்ப்பு கானிவல் இதன் முக்கிய அம்சமாகும். MYFutureJobs தளம் மூலம் RM2,500 முதல் RM16,000 வரையிலான சம்பள வரம்பில் 4,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
முதலாளிகளுடன் நேரடி நேர்காணல் தவிர, தொழில் வழிகாட்டுதல் சேவைகள் மற்றும் பல்வேறு அமைச்சுகள், துறைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மக்களுக்கு நேரடி சேவைகளை வழங்குகின்றனர்.
ரஹ்மா விற்பனை, அக்ரோ மடாணி விற்பனை, சுகாதாரப் பரிசோதனைகள், இரத்த தானம், தேசியப் பதிவுத் துறை கவுண்டர்கள் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பக் கண்காட்சி ஆகியவை இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.
மேலும், தொழிலாளர் நலன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) வாய்ப்புகள் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
தொழிலாளர் தினம் 2026: கொண்டாட்டத்தில் 15,000 பேர் பங்கேற்பு, 4,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்
1 மே 2026, 3:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




