ஷா ஆலம், மே 1: பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, எந்தவொரு பாராட்டும் அங்கீகாரமும் இன்றி, நம்முடைய சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் வசதியாகவும் வைத்திருக்க சிலர் தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர்.
கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) நிறுவனத்தின் லோரி ஓட்டுநரான 48 வயது ஷைஃபுல் அனுவார் முகமட் நூரின் அன்றாடப் பணி அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடுகிறது. அப்போது சாலைகள் அமைதியாகவும், நகரம் இருள் சூழ்ந்தும் காணப்படும்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, திடக்கழிவு மேலாண்மைத் துறையில் இவர் உண்மையுடன் சேவையாற்றி வருகிறார். பலரால் மதிக்கப்படாத இந்தப் பணி, சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
"நான் அதிகாலை 3 மணிக்கெல்லாம் தயாராகிப் பணிமனைக்குச் செல்வேன். பொதுவாக, அதிகாலை 3.30 மணிக்கு எங்கள் வேலை தொடங்கும். வாகனத்தின் நிலையைச் சரிபார்த்த பிறகு, காலை 4 மணிக்கு குப்பை சேகரிக்கும் இடங்களுக்குப் புறப்படுவோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
முதலில் வணிகப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரித்துவிட்டு, பின்னர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று மக்களின் அன்றாடக் குப்பைகளைச் சேகரிப்பதே இவர்களின் வழக்கம்.
"பொதுவாக, நாங்கள் ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது மணி நேரம் வேலை செய்வோம். மதியத்திற்குப் பிறகு, சேகரித்த குப்பைகளை அகற்றுவதற்காகக் குப்பை கொட்டும் தளத்திற்குச் செல்வோம்," என்றார் அவர்.
சாதாரணமாகத் தோன்றும் இந்த வேலைக்குப் பின், பலரும் அறியாத சவால்கள் மறைந்துள்ளன.
ஒவ்வொரு நாளும், லோரியை ஓட்டிச் செல்வதற்குக் கடினமான குறுகிய பாதைகள், மக்கள் குப்பை சேகரிப்பு அட்டவணையைப் பின்பற்றாதது மற்றும் குப்பைகளைப் பிரிப்பதில் உள்ள அலட்சியம் போன்ற தடைகளைத் தாண்டி தங்கள் கடமையை இவர்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
"சிலர் குப்பைகளைச் சரியாகப் பிரிப்பதில்லை. சில சமயங்களில் கண்ணாடி, கூர்மையான பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் ஒன்றாகக் கலந்திருக்கும். இது எங்களுக்கு மிகவும் ஆபத்தானது."
"நாங்களே சில சமயங்களில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைப் பிரிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால், குப்பை அமுக்கி (compactor) விரைவில் நிரம்பி, வேலை இன்னும் கடினமாகிவிடும்," என்று அவர் விளக்கினார்.
சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும், இடைவிடாது பெய்யும் மழையாக இருந்தாலும், தள்ளிப்போட இடமின்றிப் பணியைத் தொடர வேண்டும் என்று ஷைஃபுல் மேலும் கூறினார்.
"இந்த வேலை மிகவும் சவாலானது. வெயிலோ மழையோ, நாங்கள் தொடர்ந்து வேலை செய்தாக வேண்டும், ஏனெனில் குப்பை காத்திருக்காது," என்று அவர் சுருக்கமாகவும் ஆனால் அர்த்தத்துடனும் கூறினார்.
ஆயிரக்கணக்கான முறை செய்த இந்த வேலையில், சில நிகழ்வுகள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. ஒருமுறை, குடியிருப்பாளர் ஒருவர் தவறுதலாகத் தனது நகைகளைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டார். அவர் அதை உணர்ந்தபோது, குப்பைகள் அனைத்தும் குப்பை கொட்டும் தளத்திற்குச் சென்று விட்டன.
"இது போன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. அதனால்தான், மக்கள் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும், குறிப்பாக மதிப்புமிக்கப் பொருட்களைக் கையாளும்போது," என்றார் அவர்.
இன்று சமூகத்தின் மனப்பான்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தினமும் குப்பைகளுடன் போராடும் தங்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பதாக ஷைஃபுல் கூறுகிறார். முன்பு இந்தப் பணி தாழ்வாகப் பார்க்கப்பட்டாலும், இப்போது பலர் தங்களின் தியாகத்தை மதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் தங்களுக்கு நன்கு தெரிகிறது.
"முன்பு நாங்கள் வேலை செய்யும்போது சிலர் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது, பலர் அக்கறையுடன் இருக்கிறார்கள். சிலர் தண்ணீர் கொடுப்பார்கள், உணவு கொடுப்பார்கள், நன்றி கூடச் சொல்வார்கள்."
"இது போன்ற சிறிய விஷயங்கள்... உண்மையில் எங்களுக்குப் பெரிய அர்த்தத்தைக் கொடுக்கிறது," என்று அவர் உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினார்.
ஷைஃபுல்லைப் பொறுத்தவரை, தனக்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் ஒருபோதும் அவரது மன உறுதியைக் குலைத்ததில்லை. மாறாக, மக்களுக்கும் மாநிலத்திற்கும் ஆற்றும் கடமையைத் தொடர்ந்து செய்ய அதுவே உந்துதலாக அமைந்தது.
"நாங்கள் இல்லையென்றால், இந்தக் குப்பைகள் அகற்றப் படாது. எங்கள் குடும்பத்திற்காக நேர்மையாகவும் உண்மையாகவும் நாங்கள் இந்த வேலையைச் செய்கிறோம்."
"ஏளனப் பார்வைகளை நான் பலமாக மாற்றிக்கொண்டேன். எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், பகுதிகளை எப்போதும் தூய்மையாகவும் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது," என்று அவர் உறுதியுடன் கூறினார்.
ஒரு நாள் முழுவதும் குப்பைகளுடன் கழித்த பிறகு, மாலையில் வீடு திரும்பும்போது, அவரை வரவேற்கும் குடும்பமே அடுத்த நாள் தொடர்ந்து போராட அவருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. சோர்வுக்கு மத்தியில், அங்குதான் அவர் மீண்டும் தனது மன உறுதியைத் திரட்டிக்கொண்டு, ஒருபோதும் ஓயாத தனது பணியைத் தொடர்கிறார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, துப்புரவுப் பணியாளர்களின் பங்கை மக்கள் நன்கு புரிந்து கொண்டு, குறிப்பாகக் குப்பைகளைப் பிரிப்பதில் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ஷைஃபுல்.
"அந்த உணர்வு இருக்க வேண்டும். நாங்கள் செய்வதெல்லாம் மக்களுக்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் தான்."
"குப்பைகளைப் பிரித்து வையுங்கள், அது எங்கள் வேலையை எளிதாக்கும். நாங்கள் இதையெல்லாம் மக்களுக்காகத்தான் செய்கிறோம். நாங்கள் இல்லையென்றால், உங்கள் குடியிருப்புப் பகுதிகள் தூய்மையாக இருக்காது," என்று அவர் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறினார்.
பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, எந்த ஒரு அங்கீகாரமும் இன்றி அர்பணிப்புடன் பணிகளை தொடங்கும் கேடிஇபி பணியாளர்கள்
1 மே 2026, 2:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பண்டான் இண்டா பகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வாக வடிகால் மேம்பாட்டு திட்டம்
Shalini Rajamogun
6 மே 2026

selangor
சட்டவிரோத குப்பை கொட்டும் பிரச்சினைக்குத் தீர்வு காண சிசிடிவி பயன்பாட்டை MPS விரிவு படுத்தும்
Pakiya
3 மே 2026

selangor
சிலாங்கூரில் உள்ள சுமார் 100 பாரம்பரிய கிராமங்களில் இன்னும் முறைப்படுத்தப்பட்ட திடக்கழிவு சேகரிப்பு சேவை வழங்கப்படவில்லை
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

selangor
குப்பை சேகரிப்பில் அலட்சியம் வேண்டாம்: 'ஸ்மார்ட்' கழிவு மேலாண்மை முறையை அமல்படுத்த பரிந்துரை
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




