வீட்டிலிருந்து வேலை (BDR) செய்யும் திட்டம்,  நிதிச் சுமையைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு உதவும்

30 ஏப்ரல் 2026, 9:27 AM
வீட்டிலிருந்து வேலை (BDR) செய்யும் திட்டம்,  நிதிச் சுமையைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு உதவும்

குளுவாங், ஏப்ரல் 30: வீட்டிலிருந்து வேலை (BDR) செய்யும் திட்டம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் 10 நாட்களாக அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம், RON95 பெட்ரோலுக்கான 1.9 மில்லியன் ரிங்கிட் மானியத்தை அரசாங்கம் சேமித்துள்ளது. இது 979,632 லிட்டர் பெட்ரோலுக்குச் சமமாகும்.

இந்தச் சேமிப்பின் மூலம் ஒரு நாளைக்கு 120,816 லிட்டர் பெட்ரோல் அல்லது 239,215.68 ரிங்கிட் சேமிக்கப் பட்டுள்ளதாகப் பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ வான் அகமட் டலான் அப்துல் அஜிஸ் கூறினார்.

"இந்த எண்ணிக்கை பெரியதாகத் தெரியா விட்டாலும், மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக நான் கருதுகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கு, ஸ்ரீ லாலாங்கில் உள்ள தாமான் ரியாவில் நடைபெற்ற நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி 15,452 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று வரை இந்த எண்ணிக்கை 20,136-ஆக உயர்ந்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம், அலுவலகத்திற்கு வராமலேயே செய்யக்கூடிய பணிகளை மட்டுமே உள்ளடக்கியிருப்பதால், பொது மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

"(இருப்பினும்) தற்போதைக்கு, திங்கட்கிழமைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை. ஏனெனில், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்குப் பணிகள் ஒதுக்கப்பட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அவர்களின் பணி உற்பத்தித் திறன் மதிப்பீடு செய்யப்படும்," என்று அவர் கூறினார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்கும் தயார்நிலையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஒரு சிக்கன நடவடிக்கையாக, வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முன்னதாக, பத்து பகாட், சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையின் (HSNI) முன்னாள் எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநரான 70 வயது எம்.டி. சுலி தாவூத் உட்பட நோய்வாய்ப்பட்ட மூன்று ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு வான் அகமட் டலான் சென்றிருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ள எம்.டி. சுலி, அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களையும் சிறப்புப் படுக்கையையும் பெற்றார். மற்ற இருவர் உணவுப் பொருட்கள் மற்றும் மின்சார சக்கர நாற்காலிகள் பெற்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.