சிலாங்கூரில் கடும் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது: பிரதமர் அன்வார் அறிவிப்பு

30 ஏப்ரல் 2026, 3:52 AM
சிலாங்கூரில் கடும் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது: பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்: சிலாங்கூரில் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்புக்கான பல்வேறு பயனுள்ள முயற்சிகள் செயல்படுத்தப் பட்டதன் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஷா ஆலமில் இன்று பிற்பகல் நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட வளர்ச்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது இத் தகவல் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், எந்தவொரு குடும்பமும் அரசின் பலன்களைப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

"மிக முக்கியமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எழுச்சி பெறவும், பயிற்சியின் மூலம் அதிகாரம் பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், அதன் மூலம் அவர்கள் சொந்த வருமானத்தை ஈட்ட முடியும்."

"மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சிலாங்கூரின் பொருளாதார பலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

அதே வேளையில், பெட்டாலிங்கில் SejaTi MADANI திட்டத்தின் வெற்றியை, குறிப்பாக நகர்ப்புற ஏழைகளுக்கு உதவுவதில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அன்வார் விரும்புகிறார்.

கம்போங் மலாயு சுபாங்கில் தையல் திட்டம், பாயு டாமன்சாராவில் தேனீ வளர்ப்பு மற்றும் புக்கிட் லாஞ்சோங்கில் தளபாடங்கள் தயாரித்தல் போன்ற முயற்சிகள், சரியான ஆதரவுடன் மக்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.

இதன் மூலம் மக்கள் RM24,000 முதல் RM100,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர்."அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்புடனும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், தற்போதைய பலத்தை வலுப்படுத்தவும், வளர்ச்சியின் பலன்கள் உண்மையிலேயே மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் தொடர்ந்து முயற்சிப்போம்," என்றார் அவர்.

இக்கூட்டத்தில், சாலை பராமரிப்பு மற்றும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முன்னேற்றம் போன்ற அவசர மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றத்தையும், எழும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஆராயப் பட்டதாக பிரதமர் கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள், கழிவு மேலாண்மை மற்றும் பன்றி வளர்ப்புப் பிரச்சினை உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் சமூக மேலாண்மை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

"இவை அனைத்தும் மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்ய, மேலும் ஒழுங்கமைக்கப் பட்ட மற்றும் பயனுள்ள அணுகுமுறை தேவைப்படுகிறது. நீண்டகால வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் முடியும் வரை காத்திருக்கும் வேளையில், மக்களின் சிரமங்களைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன்," என்றார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான், பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பக்கர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.