ஷா ஆலம், ஏப். 30: தங்களுக்கு ஆட்டிசம் இருப்பதாகச் சந்தேகிப்பவர்கள், தவறான புரிதல்களை தவிர்க்க சுயமாக நோயறிதல் செய்வதை விடுத்து நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜிவாடாமாய் உளவியல் நிபுணர் மையத்தின் மருத்துவ உளவியலாளர் ஃபரிடா ஹமிமி முகமது நிஜாம் கூறுகையில், ஆட்டிசத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிற நிலைகளுடன் ஒத்துப்போவதால், சுயமாகச் செய்யப்படும் முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்றார்.
தங்களுக்கு ஆட்டிசம் இருப்பதாகச் சந்தேகிக்கும் வயது வந்தவர்கள், துல்லியமான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக முறையான வழிகள் மூலம் நோயறிதலைப் பெறுவதே முதல் படியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"மலேசியச் சூழலில், நாம் பயன்படுத்தக்கூடிய பல தளங்கள் உள்ளன. முதலாவதாக, அரசாங்க மருத்துவமனைகளை நாட விரும்பினால், குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார மருத்துவமனை (Klinik Kesihatan) மூலம் பரிந்துரைக் கடிதத்தைப் பெறலாம்.
"இந்தப் பரிந்துரை கடிதத்தின் மூலம், அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளர்களை அணுகலாம்," என்று அவர் 'வயது வந்தோருக்கான ஆட்டிசம்: அரிதாக விவாதிக்கப்படும் ஒரு யதார்த்தம்' என்ற தலைப்பில் மீடியா சிலாங்கூர் தயாரித்த 'பிச்சாரா செமாசா' நிகழ்ச்சியில் கூறினார்.
தனியார் துறையைப் பொறுத்தவரை, உளவியல் மையங்கள் அல்லது ஆட்டிசம் கண்டறியும் மையங்களில் மக்கள் மதிப்பீட்டைப் பெறலாம், ஆனால் அச்சேவைகள் அங்கீகாரம் பெற்றவையா என்பதையும் பெறப்படும் தகவல்கள் துல்லியமானவையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆட்டிசத்திற்கான நோயறிதல் தற்போதைய அறிகுறிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக சிறு வயதிலிருந்தான வளர்ச்சி வரலாற்றையும் அது உள்ளடக்கியது என்று அவர் மேலும் கூறினார்.
"ஒரு விரிவான மதிப்பீட்டிற்கு தயாராகுங்கள். வயது வந்த ஒருவர் ஆட்டிசத்திற்கான மதிப்பீட்டிற்கு வரும்போது, பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் போன்ற ஒருவரை உடன் அழைத்து வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்வோம். ஏனெனில், அந்த சிரமங்கள் சிறுவயதிலிருந்தே இருந்தனவா என்பதை உறுதிப்படுத்த இது உதவும்.
"சிரமங்கள் இப்போதுதான் தோன்றியிருந்தால், அதை நாங்கள் நரம்பியல் வளர்ச்சிப் பிரச்சனை அல்லது ஆட்டிசத்தின் அறிகுறியாகக் கருத மாட்டோம், மாறாக அது உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனையாக இருக்கலாம்," என்றார் அவர்.

நோயறிதலுக்கு வயது வரம்பு இல்லை
ஆட்டிசம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நிலை என்பதால், எந்த வயதிலும் அதைக் கண்டறிய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
"ஒருவர் தனது பேரனுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, 50 வயதில் என்னிடம் வந்த ஒரு சம்பவத்தை நான் எதிர் கொண்டுள்ளேன். அதே போன்ற சிரமங்களைத் தானும் சிறுவயதிலிருந்தே அனுபவித்து வருவதை அவர் உணர்ந்தார். எனவே, நோயறிதலுக்கு வயது வரம்பு இல்லை," என்றார்.
தனிமையை விரும்புவது, சமூகத் தொடர்புகளில் ஆர்வம் குறைவாக இருப்பது, மற்றும் வழக்கமான நடைமுறைகளில் அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒருவர் வயது வந்த பிறகு நோயறிதல் செய்யப்பட்டாலும், மூளைக்குத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் இருப்பதால் சிகிச்சை முறைகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
"எந்த வயதினராக இருந்தாலும் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நமது மூளையில் 'நியூரோபிளாஸ்டிசிட்டி' (neuroplasticity) என்ற தன்மை உள்ளது. இதன் மூலம் நம்மால் எப்போதும் கற்றுக்கொள்ளவும், மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும்," என்றார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் வரை சிலாங்கூரில் 147,794 மாற்றுத்திறனாளிகள் (OKU) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 54,667 பேர் கற்றல் குறைபாடு உடையவர்கள் என்றும், அதில் 17,794 பேர் அதாவது 32.5 விழுக்காட்டினர் ஆட்டிசம் உடையவர்கள் என்றும் சிலாங்கூர் சமூக நலத்துறை (JKM) தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு, ஆட்டிசம் மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் உட்பட 1,947 பேர் சிலாங்கூர் ஜகாட் வாரியத்திடமிருந்து (Lembaga Zakat Selangor) கல்விக் கான உதவியைப் பெற்றுள்ளனர்.






