பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 - பெட்டாலிங் ஜெயா பகுதியில் இன்று நடைபெற்ற இலவச சுகாதார முகாம் 2026 பொது மக்களின் சிறப்பான வரவேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
ஸ்ரீ சத்ய சாய் குளோபல் மலேசியா அமைப்பு (தாமான் யால் & பெட்டாலிங் உத்தாமா செண்டர்), ஸ்குவாட் கெபாஜிகான் ஶ்ரீ செத்தியா சிலாங்கூர் மற்றும் ஶ்ரீ செத்தியா இந்திய சமூகத் தலைவர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த முகாம், சமூக நலன் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் நடைபெற்றது.
இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, கம்போங் லிண்டுங்கன், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள MBPJ PJS 6/1 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், அனைத்து வயதினருமான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்விற்குக் குடும்பங்களுடன் வந்த பொதுமக்கள் பல்வேறு இலவச சுகாதார சேவைகளை பயன்படுத்தி பெரிதும் பயனடைந்தனர்.

இந்த முகாமில் மருத்துவர் ஆலோசனை, இரத்த அழுத்தம், சர்க்கரை கொலஸ்ட்ரால், பல் மற்றும் கண் பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான சுகாதார பரிசோதனைகள் (கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்), ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை, மனநலம் தொடர்பான சோதனை மற்றும் ஆதரவு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
இதனுடன், இரத்த தான முகாம் நடைபெற்று, பலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்து மனிதநேய உணர்வை வெளிப்படுத்தினர்.
சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடை பெற்ற இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தன்னார்வலர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து கொண்டனர்.
“அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்திய இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமையையும் ஆரோக்கிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.







