ஹோர்சன்ஸ், ஏப்ரல் 24 -- நாளை தொடங்கி மே 3 வரை ஹோர்சன்ஸ் ஃபோரம் அரங்கில் நடைபெற உள்ள 2026 தாமஸ் கிண்ண இறுதிப் போட்டியை முன்னிட்டு, ஒரு வித அசாதாரண உணர்வை எதிர்கொள்வதாக நாட்டின் தொழில் முறை தனிநபர் பூப்பந்து வீரர் லீ ஸீ ஜியா ஒப்புக் கொண்டார்.
தனது உடல் தகுதிப் பிரச்சினைகளால் இந்த நிலை ஏற்படவில்லை, மாறாக இந்த மதிப்புமிக்க குழுப் போட்டியில் மலேசியாவின் மூன்றாவது ஒற்றையர் வீரராகப் புதிய பங்கை ஏற்க விருப்பதால் இந்த உணர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று ஸீ ஜியா கூறினார்.
முன்னதாக நாட்டின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த வீரருக்கு இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலகத் தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள அவர், இந்த பொறுப்பு வழங்கப் பட்டால் அந்த சவாலை ஏற்கத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
“மலேசிய அணியில் மூன்றாவது ஒற்றையர் வீரராக நான் களமிறங்குவது இதுவே முதல் முறை, அதனால் இந்தச் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. இதற்கு முன், 2018 பாங்காக் பதிப்பில் எனது அறிமுகத்தின் போது இரண்டாவது ஒற்றையர் வீரராகக் களமிறக்கப் பட்டேன்," என்றார்.
“இந்தப் புதிய பங்கிற்காக நான் தயாராகிவிட்டேன், ஆனால் களத்தில் இருக்கும் போது அழுத்தம் வேறு மாதிரியாக இருக்கும். எவ்வளவுதான் தயாரானாலும், போட்டியின் போது மனநிலை மாறக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்,” என்று அவர் இன்று ஒரு பயிற்சி அமர்வின் போது பெர்னாமாவிடம் கூறினார்.
குறிப்பாக, போட்டி 2-2 என சமநிலையில் இருக்கும் போது, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் விளையாடும் அழுத்தம் ஒரு தனித்துவமான சவாலாக இருக்கும் என்பதையும் ஸீ ஜியா ஒப்புக்கொண்டார்.
இம்முறை தேசிய ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாட்டின் முதல் நிலை வீரரான லியோங் ஜுன் ஹாவ் (உலகத் தரவரிசை 25), ஜஸ்டின் ஹோ (44), மற்றும் ஐடில் ஷோலே அலி சாதிக் (51) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தரவரிசையின் அடிப்படையில் மலேசியா சற்று பின் தங்கியிருப்பதை 28 வயதான அவர் மறுக்கவில்லை. இருப்பினும், அதை பற்றி அதிகம் பேச விரும்பாமல், களத்தில் அதனை நிரூபிக்க விரும்புவதாகக் கூறினார்.
“தரவரிசையைப் பார்த்தால், நமக்குச் சற்று குறைபாடு இருப்பது உண்மைதான். நான் அதிகம் பேச விரும்பவில்லை, முடிவுகள் பேசட்டும்,” என்றார்.
உடற்தகுதி ரீதியாக, காயங்களால் கடினமான காலக் கட்டத்தைக் கடந்த பிறகு, தற்போது தனது உடல் தகுதி நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக 2021-ஆம் ஆண்டின் ஆல் இங்கிலாந்து வெற்றியாளரான அவர் கூறினார். சமீபத்தில் டென்மார்க்கின் ஹெர்னிங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமைத் தொடர்ந்து, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தற்போதைய முக்கியக் கவனம் என்றார்.
அதே வேளையில், தேசிய அணியில் நிலவும் இணக்கமான சூழலைப் பாராட்டிய அவர், போட்டிக்கு முன்னதாக அணியின் ஒற்றுமையை வலுப்படுத்த இது உதவுகிறது என்றும் குறிப்பிட்டார்.
2024 டிசம்பரில் நடந்த உலகச் சுற்றுப் பயண இறுதிப் போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, ஸீ ஜியா நீண்ட காலமாகப் போராடி வருகிறார். அதனைத் தொடர்ந்து முழுமையாகக் குணமடையாத நிலையில், மீண்டும் காயங்கள் ஏற்பட்டதால், பல போட்டிகளில் இருந்து அவர் விலக வேண்டியிருந்தது.
முழுமையாகக் குணமடைவதற்காக நீண்ட ஓய்வு எடுத்துக் கொண்ட அவர், இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த மலேசிய ஓபன் 2026 முதல் மீண்டும் விளையாடத் தொடங்கினார். பங்கேற்ற ஆறு போட்டிகளில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் 2026-இல் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்.
மலேசியா தனது பி பிரிவுப் பயணத்தை ஏப்ரல் 25-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகவும், ஏப்ரல் 27-இல் ஃபின்லாந்தையும், ஏப்ரல் 29-இல் ஜப்பானையும் எதிர்கொண்டு குழுநிலை ஆட்டங்களை நிறைவு செய்ய உள்ளது.
ஹோர்சன்ஸில் ஸீ ஜியாவுக்குப் புதிய பங்கு, புதிய சவால்
24 ஏப்ரல் 2026, 5:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


