கோலாலம்பூர், 24 ஏப்ரல் – அனைத்துலக அரங்கில் மலேசியாவின் பங்கிற்குத் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது. அமைதி உணர்வின் அடிப்படையில் பல்வேறு நாடுகளையும் மற்ற இனங்களையும் ஒன்றிணைக்கும் நாடாக மலேசியா திகழ்கிறது என அனைத்துலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் துணைத் தலைவர் ஷேக் முஹம்மது அல்-ஹசன் அல்-தித்து அல்-ஷங்கித்தி பாராட்டியுள்ளார்.
புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது தூது குழுவினருடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது ஷேக் முஹம்மது அல்-ஹசன் இந்த கருத்தைத் தெரிவித்தார்.
"இந்தச் சந்திப்பில் போர் மற்றும் அடக்குமுறை நெருக்கடிகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை மீதான அத்துமீறல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்," என்று அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"மலேசியா தற்போது தனது குடிமக்களை மட்டும் பாதுகாக்கவில்லை, மாறாக அமைதி உணர்வின் அடிப்படையில் மற்ற நாடுகளையும் இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நாடாக உருவெடுத்துள்ளது என்று ஷேக் முஹம்மது அல்-ஹசன் வலியுறுத்தியதாக, அன்வார் மேலும் கூறினார்.
ஷேக் முஹம்மது அல்-ஹசனின் மலேசியப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு அமைந்தது.








