கூட்டரசுப் பிரதேசத்தில் அரசாங்க நிலங்களில், முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களை (RIBI) புதிதாகக் கட்ட அல்லது  விரிவுபடுத்த  இன்று முதல் அனுமதி இல்லை

24 ஏப்ரல் 2026, 3:26 AM
கூட்டரசுப் பிரதேசத்தில் அரசாங்க நிலங்களில், முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களை (RIBI) புதிதாகக் கட்ட அல்லது  விரிவுபடுத்த  இன்று முதல் அனுமதி இல்லை

கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள அரசாங்க நிலங்களில், முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களை (RIBI) புதிதாகக் கட்டுவதற்கோ அல்லது தற்போதுள்ளவற்றை விரிவுபடுத்துவதற்கோ இன்று முதல் அனுமதி இல்லை.

இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்ட அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய ஆக்கிரமிப்புகளையும், அனுமதியின்றி தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்களை விரிவு படுத்துவதையும் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசம்) ஹன்னா இயோ கூறினார்.

"இன்று தொடங்கி, அரசாங்க நிலங்களில் புதிய ஆக்கிரமிப்புகளையும், அனுமதியின்றி தற்போதுள்ள (RIBI) கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதையும் தடுப்பதற்காக, எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அல்லது விரிவாக்கப் பணிகளுக்கும் அனுமதி இல்லை.

நடைமுறையில் உள்ள விதிகளுக்கு ஏற்ப உள்ளூராட்சி மன்றங்கள் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்."

"உள்ளூர் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளும் விவேகத்துடனும் மரியாதையுடனும் செயல்படுத்தப்படும்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தனது தலைமையில் நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான செயற்குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் மற்றும் தீர்வு காணும் செயல்முறையை வலுப்படுத்த, கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலேசிய பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய, தாவோயிச மதங்களின் பேரவை (MCCBCHST) ஆகியோரின் பங்களிப்புடன் கூட்டத்தின் விதிமுறைகள் மேம்படுத்தப் பட்டதாகவும் ஹன்னா கூறினார்.

"சமூகத்தின் தேவைகளையும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தைக் கையாள்வதில் மடாணி அரசாங்கம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, விவேகமான மற்றும் நியாயமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது," என்றார் அவர்.

இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், கூட்டரசுப் பிரதேச திணைக்களம் (JWP) நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அனுமதியின்றி கட்டப்பட்ட முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும், இதுவரை அரசாங்க நிலத்தில் 163 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், MCCBCHST உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக, அந்தந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் 11 துணைக் குழுக்களை அமைக்கவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டதாக ஹன்னா தெரிவித்தார்.

அதே வேளையில், நாடு தழுவிய அளவில் ஒரு சீரான மற்றும் ஒழுங்கான அணுகுமுறையை உறுதி செய்வதற்காக, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு (KPKT) முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான நிர்வாக வழிகாட்டுதல்களைச் செம்மைப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

"இந்த அனைவரையும் உள்ளடக்கிய விவேகமான அணுகுமுறை, ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வைக் காண வழிவகுக்கும் என்றும், அதன் மூலம் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்றும் நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.